Published:Updated:

`தேனியைத் தொடர்ந்து தேவாரம்; இரவில் தொடரும் கைவரிசை!’ - அச்சத்தில் பொதுமக்கள்

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாகத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துவரும் சூழலில், கடந்த ஒரு வாரமாகத் தேவாரம் பகுதியில் தங்களது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டனர் கொள்ளைக் கும்பல் ஒன்று.

தேவாரம்
தேவாரம்

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள பலசரக்குக் கடை, அரிசிக் கடை, மொபைல் கடைகளைக் குறிவைக்கும் கொள்ளைக் கும்பல், இரவு நேரங்களில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணம் மற்றும் பொருள்களைத் திருடிச் செல்வது தொடர்கதையாக உள்ளது. தேவாரம் அருகே உள்ள மல்லிங்காபுரத்தில் இரண்டு தினங்களுக்கு முன்னர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தூங்கிக்கொண்டிருந்த கணவன், மனைவி ஆகிய இருவரையும் கடுமையாகத் தாக்கி, தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.

கோம்பை காவல்நிலையம்
கோம்பை காவல்நிலையம்

குடியிருப்புப் பகுதிகளுக்குள் தைரியமாக நுழைந்து திருடிச் சென்ற கொள்ளையர்களால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், இன்று, கரியணம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், இரண்டு உண்டியல்களை உடைத்து பணத்தை அள்ளிச்சென்றனர். இதேபோல பண்ணைப்புரத்திலும் ஒரு வீட்டில் கொள்ளைச் சம்வம் நடைபெற்றுள்ளது.

தொடர்ச்சியாக நடக்கும் கொள்ளைச் சம்பவங்களை அடுத்து வழக்கு பதிவு செய்யும் காவல்துறை, அவற்றை முறையாக விசாரித்து, கொள்ளைக் கும்பலை பிடிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர் பொதுமக்கள்.

திருட்டுச் சம்பவம் நடைபெற்ற அரிசி கடை (தேவாரம்)
திருட்டுச் சம்பவம் நடைபெற்ற அரிசி கடை (தேவாரம்)

இரவு நேரங்களில் ரோந்துப் பணியை மேற்கொள்ளாத காவல்துறையினர், காவல்நிலையத்தில் தூங்குவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாகத் தேவாரம் காவல்நிலைய வட்டாரத்தில் கேட்டபோது, “கொள்ளைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது” என ஒற்றைவரியில் முடித்துகொண்டனர். இரவு நேரங்களில் நடைபெறும் தொடர் திருட்டுச் சம்பங்களால் தேவாரம் பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்.