Published:Updated:

நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு! - மன்னார்குடி அதிர்ச்சி

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டின் கொல்லைப்புறக் கதவை உடைத்துக்கொண்டு மர்ம நபர் ஒருவர் வீட்டுக்கு புகுந்ததாகச் சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நள்ளிரவில் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர், தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்தத் துணிகர திருட்டில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை மன்னார்குடி காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

மன்னார்குடி
மன்னார்குடி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலுள்ள காமராஜ் நகரில் வசித்துவருபவர் ரெங்கராஜ். இவரின் மனைவி கிரிஜா. இரவு வீட்டுக்குள் கதவைப் பூட்டிவிட்டு தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள். இவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டின் கொல்லைப்புறக் கதவை உடைத்துக்கொண்டு மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தூக்கத்தில் இருந்த கிரிஜா கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து ஓடியிருக்கிறார். கழுத்திலிருந்த செயின் அறுபட்டதை உணர்ந்த கிரிஜா, கண்விழித்துப் பார்த்து கூச்சல் போட்டிருக்கிறார். உடனே கிரிஜாவின் கணவர் ரெங்கராஜ் பதற்றத்தோடு எழுந்து, அந்த மர்ம நபரை விரட்டிச் சென்றிருக்கிறார். அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து மாயமாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

காரைக்காலில் சிலை திருட்டு; மன்னார்குடியில் இரும்புக்கடை முதலாளி; 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது!

இது குறித்து மன்னார்குடி காவல் நிலையத்தில் ரெங்கராஜ் - கிரிஜா தம்பதியர் புகார் அளித்திருக்கிறார்கள். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு, செயினை திருடிச் சென்ற அந்த மர்ம நபரைத் தேடிவருகிறார்கள். இந்தத் துணிகர திருட்டுச் சம்பவம் மன்னார்குடிப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசும் இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், ``வீட்டுக்குள் ஆட்கள் இருக்கும்போதே, கதவை உடைத்து திருட்டு நடந்திருப்பது, இப்பகுதி மிகவும் ஆபத்தான சூழலில் இருப்பதை உணர்த்துகிறது. இது அதீத ஆபத்தின் தொடக்கம். இதனால் பொதுமக்களும், குறிப்பாக காவல்துறையினரும் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும். சமீபகாலமாக இந்தப் பகுதிகளில் புதிய நபர்களின் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இது போன்ற நபர்கள் தங்களது தெருவுக்குள் வருவதை மக்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

திருவாரூர் காவல்துறையினர்
திருவாரூர் காவல்துறையினர்

அவர்களை மிகுந்த எச்சரிக்கையோடு அணுகுவதோடு, சந்தேகம் வலுவானால் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் மிகுந்த விழிப்புடன் இருப்பது அவசியம். சிறிய சத்தம் கேட்டால்கூட, உடனடியாக எழுந்து, என்னவென்று பார்த்து சுதாரிப்போடு நடந்துகொள்ள வேண்டும். இது ஒருபுறமிருக்க, சமீபகாலமாக மன்னார்குடி மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. எளிதாக கஞ்சா கிடைப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை கஞ்சா பயன்படுத்தக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளது. இது போன்றவர்களால் குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மன்னார்குடி மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சாவை முற்றிலும் ஒழித்துக்கட்ட காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு