Published:Updated:

`முகமூடி, கத்தியுடன் வந்த 10 பேர்.. தாக்கப்பட்ட நாய்’ -`தீரன்' பட பாணியில் நடந்த பழநி நகைக் கொள்ளை

கொள்ளைச் சம்பவம் நடந்த வீடு
கொள்ளைச் சம்பவம் நடந்த வீடு

``ஒவ்வொரு தோட்டத்துக்கும் அதிக இடைவெளி இருக்கும். இந்த நிலையில், நேற்று இரவு நடந்த கொள்ளைச் சம்பவம் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.”

திண்டுக்கல் மாவட்டம், பழநி தாலுகா தாழையூத்தைச் சேர்ந்தவர் முருகசாமி. விவசாயியான இவர் தோட்ட வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். தங்கச்சி பேரன்கள் உள்ளிட்ட ஏழு நபர்களுடன் நேற்று இரவு வீட்டில் முருகசாமி தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில், நள்ளிரவில் பத்துக்கும் மேற்பட்ட முகமூடிக் கொள்ளையர்கள் அவரின் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்த அனைவரும் துக்கத்தில் இருந்து எழுந்துள்ளனர். அப்போது அனைவரின் கழுத்திலும் கத்தியை வைத்து கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். வீட்டில் பணம் எதுவும் இல்லாத நிலையில் பெண்களின் கழுத்தில் இருந்த 20 பவுன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

விசாரணை நடத்தும் காவலர்கள்
விசாரணை நடத்தும் காவலர்கள்

கொள்ளையர்களைப் பார்த்துக் குரைத்த நாயையும் கத்தியால் தாக்கியுள்ளனர். இந்தப் பகுதியில் விவசாயிகள் பெரும்பாலும் தோட்ட வீடுகளில் வசித்து வருகிறார்கள். ஒவ்வொரு தோட்டத்திற்கும் அதிக இடைவெளி இருக்கும். இந்த நிலையில், நேற்று இரவு நடந்த கொள்ளைச் சம்பவம் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

`தீரன்' திரைப்பட பாணியில் பத்துக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தை ஆய்வு செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். பழநி சாமிநாதபுரம் காவல்துறையினர் இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

`கஞ்சா, கந்துவட்டியோடு மணல் திருட்டு!' -பட்டுக்கோட்டை டிஎஸ்பி -யின் பல்ஸ் பார்க்கும் மாமூல் போலீஸ்
அடுத்த கட்டுரைக்கு