Published:Updated:

சென்னை: `பூட்டிய வீட்டுக்குள் சத்தம்!' - இரும்பு வியாபாரி வீட்டில் பகலில் கொள்ளை

க்ரைம்
க்ரைம் ( Representational Image )

சென்னையில் இரும்பு வியாபாரி வீட்டின் கதவை உடைத்து பட்டப்பகலில் 50 சவரன் தங்க, வைர நகைகளை முகமூடி அணிந்துவந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்துவிட்டு சென்ரிருக்கிறார்கள்.

சென்னை, எம்.கே,பி- நகர் மத்திய நிழற்சாலை, அப்துல்கலாம் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜோசப் செல்வராஜ் (57). வண்ணாரப்பேட்டையில் இரும்பு வியாபாரம் செய்துவருகிறார். கடந்த 26-ம் தேதி ஜோசப் செல்வராஜின் மகன் அலெக்சாண்டருக்குத் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு ஜோசப் செல்வராஜைத் தவிர குடும்பத்தினர் அனைவரும் பெங்களூரு சென்றனர். அதனால் வீட்டில் ஜோசப் செல்வராஜ் தனியாக இருந்துவருகிறார்.

கொள்ளை நடந்த வீட்டின் கதவு
கொள்ளை நடந்த வீட்டின் கதவு

நவம்பர் 4-ம் தேதி காலையில் கடைக்குச் செல்வதற்காக அவர் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றார். அன்று பிற்பகலில் எதிர் வீட்டில் வசித்துவரும் லலிதா என்பவர் ஜோசப் செல்வராஜுக்கு போன் செய்து `உங்கள் வீட்டுக்குள்ளிருந்து ஏதோ சத்தம் கேட்கிறது' என்று கூறி இணைப்பைத் துண்டித்திருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜோசப் செல்வராஜ், கடையிலிருந்து உடனடியாக வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 50 சவரன் தங்கம், நான்கு வைரக் கம்மல் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து ஜோசப் செல்வராஜ், எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது காரில் வந்திறங்கும் முகமூடிக் கொள்ளையர்கள், ஜோசப் செல்வராஜ் வீட்டுக்குள் நுழைகின்றனர். 20 நிமிடங்களுக்குப் பிறகு அந்தக் கொள்ளையர்கள் திரும்பி வந்து காரில் ஏறிச் செல்கின்றனர். அந்தக் காட்சிகள் அடிப்படையில் போலீஸார் கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.

சென்னை: `250 சவரன் நகைகள்; ரூ. 95 லட்சம் பணம்' -  வயதான  தம்பதியரைக் கட்டிப்போட்டுவிட்டு கொள்ளை!
பீரோ
பீரோ

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``இரும்பு வியாபாரி ஜோசப் செல்வராஜ் குடும்பத்தினர் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருந்துவருகின்றனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 56 வீடுகள் இருக்கின்றன. நான்கு மாடிகள்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழையும் முகமூடிக் கொள்ளையர்கள் ஜோசப் செல்வராஜ் வீட்டுக்குள் செல்வதற்குள் முன்னர் எதிர் வீட்டின் கதவை வெளிப்புறமாகத் தாழ்ப்பாள் போட்டிருக்கிறார்கள். அதன் பிறகுதான் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பட்டப்பகலில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பதால் ஜோசப் செல்வராஜின் வீட்டில் ஆள் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட முகமூடிக் கொள்ளையர்கள் கைவரிசைக் காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு