Published:Updated:

`5 சிசிடிவி, தண்ணீர்த் தொட்டியில் ஹார்டு டிஸ்க்!’-கடலூர் கலெக்டரின் பேராவூரணி வீட்டில் நடந்த கொள்ளை

கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு

கலெக்டர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேராவூரணி அருகே உள்ள கடலுார் கலெக்டர் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், 55 பவுன் நகை உள்ளிட்ட பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றதுடன், மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, வீட்டில் இருந்த 5 சிசிடி.வி கேமராக்களை உடைத்ததுடன், கேமரா காட்சிகள் பதிவாகக்கூடிய ஹார்டு டிஸ்க்கை பின்புறம் உள்ள தண்ணீர்த் தொட்டியில் வீசிச் சென்றுள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் அன்புச்செல்வன்
கலெக்டர் அன்புச்செல்வன்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த நாடியம் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன், கடலுார் மாவட்ட கலெக்டராக உள்ளார். இவரின் மனைவி, மாலதி. இருவரும் குடும்பத்துடன் கடலுாரில் வசித்துவருகின்றனர். ஊரில் நடக்கும் விஷேங்கள், ஊரின் நலனுக்காக நடைபெறும் கூட்டங்கள் போன்றவற்றில் தவறாமல் கலந்துகொள்வார் அன்புச்செல்வன். மற்ற நாள்களில் கடலூரிலேயே இருப்பார்.

இதனால் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர், அங்கேயே தங்கி வீட்டைப் பராமரித்து, கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு பணியை முடித்துவிட்டு செல்வம் வீட்டின் முன்பக்கம் படுத்திருந்திருக்கிறார். யாரோ சில மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க காம்பௌண்டு சுவர் ஏறிக் குதித்து உள்ளே வந்து, வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்ததுடன், அங்கிருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த சுமார் 55 பவுன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கலெக்டர் வீடு
கலெக்டர் வீடு

அத்துடன், அவர்கள் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, வீட்டில் முன்பக்கம் மற்றும் வீட்டின் உள்ளே பொறுத்தப்பட்டிருந்த 5 சிசிடி.வி கேமராக்களை உடைத்துள்ளனர். மேலும், சிசிடி.வி-யில் பதிவாகும் காட்சிகளைக் கண்காணிக்க வைத்திருந்த டி.வி மற்றும் காட்சிகள் ரெக்கார்டு ஆகும் ஹார்டுடிஸ்க் ஆகியவற்றை எடுத்து வீட்டின் பின்பக்கம் உள்ள தண்ணீர்த் தொட்டிக்குள் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், காலையில் செல்வம் எழுந்து வீட்டை சுற்றிப் பார்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப் பட்டிருந்ததையும், வீட்டுக்குள் பீரோ உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தவர், பதறிப்போய் கலெக்டர் அன்புசெல்வனுக்கு தகவல் கொடுத்துள்ளார். கலெக்டர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கலெக்டர் வீடு
கலெக்டர் வீடு

இதையடுத்து, பட்டுக்கோட்டை டிஎஸ்பி சுப்ரமணியன், சேதுபாவாசத்திரம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அத்துடன் தஞ்சையில் இருந்து டஃபி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய், அரை கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி அப்படியே நின்றுவிட்டது. மேலும், கைரேகை நிபுணர் கலைக்கண்ணகி, சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு