Published:Updated:

இரவு 10 மணிக்குப் பூட்டிய வீடு; 11 மணிக்குக் கொள்ளை! - சுற்றுலா சென்ற பொறியாளர் வீட்டில் துணிகரம்

இரவு 10 மணியளவில், வீட்டைப் பூட்டிவீட்டு, பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் கிளம்பிச் சென்ற நிலையில், 11 மணியளவில், அந்த வீட்டுக்குள் மின் விளக்குகள் எரிந்திருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே வசித்துவரும் மென்பொருள் பொறியாளரின் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள விசலூரில் வசித்துவருபவர் பாலமுருகன். மென்பொருள் பொறியாளரான இவர், சென்னையில் இயங்கிவரும் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்திருக்கிறார்.

பாலமுருகனின் மனைவி கீர்த்திகா, மகள் ஹர்ஷிதா ஆகியோர் விசலூரிலுள்ள வீட்டில் வசித்துவருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பாலமுருகன் கடந்த சில மாதங்களாக, விசலூரிலுள்ள தனது வீட்டிலிருந்து பணிபுரிந்துவருகிறார். இரு தினங்களுக்கு முன்பு, பாலமுருகன் தனது வீட்டைப் பூட்டிவிட்டு மனைவி கீர்த்திகா, குழந்தை, உறவினர்களுடன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அப்போதுதான் வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கிறது.

கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு

இந்தக் கொள்ளை சம்பவம் குறித்துப் பேசும் நன்னிலம் காவல்துறையினர், ``பொறியாளர் பாலமுருகன் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருக்கிறார் என்பதை நன்கு அறிந்த நபர்கள்தான், நேரடியாகவோ அல்லது வேறு நபர்களுக்கோ தகவல் தெரிவித்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தை நடத்தியிருக்கிறார்கள். இரவு நேரத்தில் இங்கு கொள்ளையடிக்கத் திட்டமிட்ட கொள்ளையர்கள், கடப்பாரையால் வீட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று, அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள்’’என தெரிவிக்கிறார்கள்.

நகைக் கடை உரிமையாளர் மீது மிளகாய்பொடி தூவிய பெண்! - கொள்ளை முயற்சியில் சிக்கிய கணவன், மனைவி

இந்தச் சம்பவம் குறித்து பேசும் அக்கம் பக்கத்து வீட்டினர், இரவு 10 மணியளவில், வீட்டைப் பூட்டிவிட்டு, பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் இங்கிருந்து கிளம்பிச் சென்ற நிலையில் 11 மணியளவில், இந்த வீட்டினுள் மின் விளக்குகள் எரிந்திருக்கின்றன. அப்போதுதான் இந்தக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடும். ஆனால் பாலமுருகன் குடும்பத்தினர், வீட்டைப் பூட்டிவிட்டு சுற்றுலா கிளம்பிச் சென்ற விஷயம் தங்களுக்குத் தெரியாததால் சந்தேகம் வரவில்லை என்கிறார்கள். கதவுடன் இணைந்த பாக்ஸ் பூட்டு என்பதால், வீட்டினுள் பாலமுருகன் குடும்பத்தினர் இருப்பதாகவே நினைத்திருக்கிறார்கள். இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம், அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கொள்ளையர்களைப் பிடிக்க, காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு