Published:Updated:

`நம்பினேன், இப்படி பண்ணிட்டான்'- வேலைக்காரரைக் காட்டிக் கொடுத்த முதலாளியின் `செக்'

எஸ்.மகேஷ்

உறவினர் வீட்டின் நிகழ்ச்சிக்காக, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்ற நேரத்தில் கொள்ளையடித்த வேலைக்காரர் ரவியின் சுயரூபம் வங்கியில் கொடுக்கப்பட்ட `செக்' மூலம் முதலாளிக்கு தெரியவந்துள்ளது.

கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு

சென்னை, திருவான்மியூர், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் செய்யது லியாகத் அலி (73). இவர், உறவினர் வீட்டின் நிகழ்ச்சிக்காக வீட்டைப் பூட்டிவிட்டு சில தினங்களுக்கு முன்பு ஈரோடு சென்றார். இந்தச் சமயத்தில் லியாகத் அலி, சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் சென்னை வங்கியிலிருந்து போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய வங்கி ஊழியர் ஒருவர், `நீங்கள் யாருக்காவது இரண்டரை லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்தீர்களா?' என்று கேட்டார். அதற்கு லியாகத் அலி, `நான் யாருக்கும் செக் கொடுக்கவில்லை' என்று பதிலளித்ததோடு என்ன விவரம் என்று கேட்டார்.

Representational image
Representational image

அதற்கு வங்கி ஊழியர், `உங்களின் செக்கில் கையொப்பம் வித்தியாசமாக இருந்ததால்தான் தகவலைத் தெரிவித்தேன்' என்று கூறினார். அதைக்கேட்ட லியாகத் அலி, என்னுடைய செக்கை கொண்டு வந்தது யார்? என்று கேட்டபோது, செக்கை கொண்டு வந்த நபர், வங்கியிலிருந்து நைசாக எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் வங்கி ஊழியர் அவரை தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

செக் விவகாரத்தால் அதிர்ச்சியடைந்த லியாகத் அலி, வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர் ஒடிசாவைச் சேர்ந்த ரவிக்கு போன் செய்தார். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. இதனால், உறவினர் ஒருவருக்கு லியாகத் அலி போன் செய்து தகவலைத் தெரிவித்தார். அவர், லியாகத் அலியின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் பொருள்கள் சிதறிக் கிடந்தன. இதுகுறித்து லியாகத் அலிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஈரோட்டிலிருந்து அவசர அவசரமாக சென்னை திரும்பினார் லியாகத் அலி. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 46 சவரன் தங்க நகைகளும் வங்கியின் செக் புத்தகமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் வேலைக்காரர் ரவியின் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறினார்.

கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், கைரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும், அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் வந்துசெல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து, போலீஸார் வங்கிக்குச் சென்று விசாரித்தனர். அப்போது வங்கியில் லியாகத் அலியின் செக்கில் 2,50,000 ரூபாய் பூர்த்தி செய்யப்பட்டு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த செக்கில் லியாகத் அலியின் கையொப்பமும் போடப்பட்டிருந்தது. அதைப்பார்த்த லியாகத் அலி அதிர்ச்சியடைந்ததோடு, நான் இந்த கையொப்பத்தைப் போடவில்லை என்று போலீஸாரிடம் கூறினார்.

வங்கியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது ரவி, அங்கு வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனால் ரவிதான், செக்கில் லியாகத் அலி போல கையெழுத்திட்டு 2,50,000 ரூபாயை எடுக்க வந்ததைக் கண்டறிந்த போலீஸார் அவரைத் தேடினர். ஆனால், அவரின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால், நகைகளோடு ரவி, சொந்த மாநிலமான ஒடிசாவுக்குச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்துள்ளனர்.

வங்கியின் ஊழியர் மட்டும் ரவி கொண்டு வந்த செக்கிற்கு பணம் கொடுத்திருந்தால் நகைகளோடு பணத்தையும் இழந்திருப்பார் லியாகத் அலி. மேலும், வங்கி ஊழியர் கொடுத்த தகவலால்தான் வீட்டில் கொள்ளை நடந்த விவரமும் லியாகத் அலிக்கு தெரியவந்துள்ளது.

நீங்கள் யாருக்காவது இரண்டரை லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்தீர்களா?
வங்கி ஊழியர்

இதற்கிடையில் போலீஸாரிடம் லியாகத் அலி, `ரவியை நம்பினேன். ஆனால் அவர் இப்படி செய்துவிட்டாரே' என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதைக் கேட்ட போலீஸார், `ரவி யார் மூலம் வேலைக்குச் சேர்ந்தார்' என்று கேட்டு அவரின் விவரங்களை சேகரித்து அதன் அடிப்படையில் ரவியைப் பிடிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``லியாகத் அலி, அரசு அதிகாரியாக வேலைபார்த்து ஓய்வு பெற்றுவிட்டார். தன்னைக் கவனித்துக்கொள்ள ரவியை லியாகத் அலி வேலைக்கு நியமித்துள்ளார். அப்போது லியாகத் அலி மற்றும் அவரின் குடும்பச் சூழ்நிலைகளை ரவி தெரிந்துகொண்டுதான் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொள்ளையடித்துள்ளார். வீட்டில் பணம் இல்லாததால், செக் மூலம் லியாகத் அலியின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ரவி முடிவு செய்துள்ளார். அதற்காக லியாகத் அலியின் கையொப்பத்தை ரவியே போட்டுக்கொண்டு வங்கியில் அதை மாற்றக் கொடுத்துள்ளார். விரைவில் ரவியைக் கைது செய்துவிடுவோம்" என்றனர்.