திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செயல்பட்டுவரும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நள்ளிரவு மர்ம நபர்களால் பணம் கொள்ளையடிக்கப்பட்டதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி-யும் மாயமான சம்பவம், இப்பகுதி வணிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அம்மாப்பட்டினத்தைச் சேர்ந்தவர், முகமது அலியார். இவர் தற்போது திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சிங்காரவேலு உடையார் தெருவில் வசித்துவருகிறார். மன்னார்குடி காந்தி சாலையில், இவர் சூப்பர் மார்க்கெட் நடத்திவருகிறார்.
வியாபாரத்தை முடித்துவிட்டு, இரவு வழக்கம்போல் தனது சூப்பர் மார்க்கெட்டைப் பூட்டிவிட்டு முகமது அலியார், தன்னுடைய வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை தனது வீட்டிலிருந்து கிளம்பி சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றுள்ளார். வழக்கம்போல், சூப்பர் மார்க்கெட்டின் கதவுகளைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டி திறந்தநிலையில் கிடந்ததோடு, அதன் அருகே சில்லறைக் காசுகள் சிதறிக் கிடந்திருக்கின்றன. இதனால் சந்தேகமடைந்த அவர், சூப்பர் மார்க்கெட் முழுவதும் பார்வையிட்டபோது, அங்கிருந்த ஜன்னல்கள் ஒன்றின் கம்பி அறுக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த முகமது அலியார், இது குறித்து உடனடியாக மன்னார்குடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த காவல்துறையினர், தீவிர ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் நள்ளிரவில், சூப்பர் மார்க்கெட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்து, இங்கு கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. மேலும் மர்மநபர்கள், தாங்கள் காவல்துறையினரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி-யையும் எடுத்து சென்றுள்ளார்கள். சம்பவம் நடைபெற்ற இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்திய மர்ம நபர்களைக் கண்டுபிடிக்க, மன்னார்குடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.