Published:Updated:

திருவாரூரில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்: தந்தையின் துக்கத்திற்கு சென்ற ஆசிரியை வீட்டில் துணிகரம்!

மன்னார்குடி, நன்னிலம் பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்ட அதே மர்ம நபர்கள் தான் ஆசிரியை வீட்டிலும் கைவரிசை காட்டியிருக்கிறார்களா? அல்லது இங்கு கொள்ளையடித்தது வேறு நபர்களாக என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருவாரூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை, தனது தந்தையின் துக்கத்திற்கு சென்றிருந்த போது, வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் இப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

திருவாரூரில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்: தந்தையின் துக்கத்திற்கு சென்ற ஆசிரியை வீட்டில் துணிகரம்!

சமீபகாலமாக திருவாரூர் மாவட்டத்தில் கொள்ளை சம்பங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, மன்னார்குடி காமராஜ் நகரில் வசித்து வரும் ரெங்கராஜ் - கிரிஜா தம்பதியினர், இரவு வீட்டுக்குள் கதவைப் பூட்டிவிட்டு தூங்கிக்கொண்டிருந்தபோது, நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டின் கொல்லைப்புறக் கதவை உடைத்துக்கொண்டு மர்ம நபர் உள்ளே புகுந்து, கிரிஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த செப்டம்பர் மாதம், நன்னிலம் அருகே விசலூரில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் பாலமுருகன், தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா கிளம்பி சென்ற அடுத்த சில மணிநேரத்தில் இவரது வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்நிலையில்தான் தற்போது மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவாரூர் அருகே கூட்டுறவு நகரில் வசித்து வருபவர் வடிவேல். இவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவரின் மனைவி கவிதா. எருக்காட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். வேதாரண்யம் அருகே உள்ள கரியாபட்டினத்தில் வசித்து வந்த இவரின் தந்தை இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கடந்த 7-ந் தேதி கவிதா - வடிவேல் தம்பதியினர் தங்களது வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்றிருக்கிறார்கள்.

திருவாரூரில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்: தந்தையின் துக்கத்திற்கு சென்ற ஆசிரியை வீட்டில் துணிகரம்!

இந்த நிலையில் மீண்டும் தங்களது வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு வடிவேல் தகவல் தெரிவித்திருக்கிறார். வீட்டின் உள்ளே சென்று காவல்துறையினர் சோதனை செய்த போது வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், 25 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை போனது தெரிய வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து, தடவியல் நிபுணர்கள் இங்கு வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த இடத்தில் பதிவான ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இரவு 10 மணிக்குப் பூட்டிய வீடு; 11 மணிக்குக் கொள்ளை! - சுற்றுலா சென்ற பொறியாளர் வீட்டில் துணிகரம்

மோப்ப நாயும் அழைத்துவரப்பட்ட நிலையில், அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொள்ளையர்களை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை முடக்கிவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மன்னார்குடி, நன்னிலம் பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்ட அதே மர்ம நபர்கள் தான் ஆசிரியை வீட்டிலும் கைவரிசை காட்டியிருக்கிறார்களா? அல்லது இங்கு கொள்ளையடித்தது வேறு மர்ம நபர்களாக இருக்குமா என பல கோணங்களிலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு