Published:Updated:

திருச்செந்தூர்: சந்நிதியில் பக்தரிடம் திருடப்பட்ட 39 சவரன் தங்க நகைகள் - மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
News
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

மூலவர் சந்நிதியில் தரிசனம் செய்தவர் தன் தோளில் மாட்டியிருந்த பையை வெட்டி, தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பெரியார்நகரைச் சேர்ந்தவர் கணேசன். ஓய்வுபெற்ற தபால் ஊழியரான இவர், மனைவி முத்துகமலம், மகன் முத்துபாண்டி, மருமகள் சங்கீதா லட்சுமி, பேத்திகள் எனக் குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூர் வந்திருந்தார். கோயிலின் அருகிலிருக்கும் ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து அனைவரும் தங்கினர். பின்னர், சாமி தரிசனம் செய்வதற்காக கணேசன் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்தார். முடிக்காணிக்கை செலுத்திய கணேசன், கடற்கரையிலும் நாழிக்கிணற்றிலும் புனித நீராடிவிட்டு நேர்த்திக்கடனைச் செலுத்தியிருக்கிறார்.

கணேசனின் பின்னால் நிற்கும் நகை திருடிய மர்மநபர்
கணேசனின் பின்னால் நிற்கும் நகை திருடிய மர்மநபர்

அதைத் தொடர்ந்து, ரூ.100 சிறப்பு கட்டண தரிசன வரிசையில் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கணேசன் தன் தோளில் பேக் ஒன்றை அணிந்திருந்தார். மூலவர் சுப்பிரமணியர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட சந்நிதிகளில் தரிசனம் செய்துவிட்டு தங்கக் கொடிமரம் அருகே வந்தபோது, அவர் தோளில் அணிந்திருந்த பேக், எடை குறைந்து காணப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதனால் அவர், அந்த பேக்கை சோதனை செய்திருக்கிறார். அப்போது, அதில் துணிப்பையில் சுற்றி மடக்கிவைத்திருந்த 39 பவுன் தங்க நகைகள், ரூ.40,000 ரொக்கப் பணம் ஆகியவை பிளேடால் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மூலவர் சந்நிதிப் பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், மூலவர் சுவாமி சுப்பிரமணியர் சந்நிதியில் கணேசன் சுவாமி தரிசனம் செய்தபோது, அவருக்குப் பின்னால் நடந்து வந்த ஒருவர், தோள் பேக்கை பிளேடால் வெட்டி துணிப் பையோடு நகையையும் பணத்தையும் திருடிய காட்சிகள் பதிவாகியிருந்தன.

காவல் நிலையத்தில் புகார் அளித்த கணேசன், அவரின் மகன்
காவல் நிலையத்தில் புகார் அளித்த கணேசன், அவரின் மகன்

இந்தச் சம்பவம் தொடர்பாக கோயில் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அத்துடன், சிசிடிவி காட்சிப் பதிவுகள் மூலம் நகையோடு மாயமான அந்த மர்ம நபரைக் கண்டறியும் பணியில் தனிப்படை போலீஸார் இறங்கியிருக்கின்றனர். திருடப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.14 லட்சம் என்று கூறப்படுகிறது. கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதுபோல் வந்து பக்தர்களோடு பக்தராக வரிசையில் காத்திருந்து மர்ம நபர் ஒருவர் தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.