Published:Updated:

`சார், காரின் 4 டயரையும் காணல'- காவல் நிலையத்துக்கு வந்த வித்தியாசமான புகார்

`சார், என்னுடைய புதுகாரின் 4 டயர்களையும் காணவில்லை' என்று தனியார் நிறுவன ஊழியர் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

car
car

இந்த வித்தியாசமான புகாரின் விவரம் இதோ!

சென்னை அம்பத்தூர் பாடி, டி.வி.எஸ்.நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்பாபு. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். சொந்தமாக புது கார் ஒன்றை வாங்கியிருந்தார். காரை வீட்டின் வெளியில் அவர் நிறுத்தியிருந்தார். இவரின் குடும்பத்தினர் கொளத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். காரில் கோயிலுக்குச் செல்லத் திட்டமிட்ட மகேஷ்பாபு, குடும்பத்தினருடன் ஆட்டோவில் டி.வி.எஸ். நகருக்கு வந்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

car
car

காரின் 4 டயர்களையும் நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர். இதனால் அவரால் காரில் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் மகேஷ்பாபு விசாரித்தார். ஆனால், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர், ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மகேஷ்பாபு கொடுத்த புகாரில் `சார், என்னுடைய புது காரிலிருந்து 4 டயர்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்' என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் காரின் 4 டயர்களைத் திருடியவர்களைக் கண்டுபிடிக்க அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துவருகிறோம். இந்தச் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Vikatan

மேலும், திட்டம் போட்டு ஒவ்வொரு டயரையும் பொறுமையாகக் கழற்றி அந்தத் திருட்டுக் கும்பல் கொண்டு சென்றுள்ளது. சிசிடிவியின் உதவியோடு விரைவில் காரின் டயர்களைத் திருடிய கும்பலைப் பிடித்துவிடுவோம்" என்றனர்.

காவல் நிலையத்துக்கு வந்த இந்தப் புகார், காவல் துறையினரை மட்டுமல்லாமல் அந்தப்பகுதியினரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.