Published:Updated:

`கஷ்டங்கள் நீங்க, தங்கம் பெருக... புளி உருண்டைப் பரிகாரம்!' - தேனியில் கைதான போலி ஜோதிடர்

Theni Police Station
Theni Police Station

மக்களின் மூடநம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு, பணம் பார்க்கும் கூட்டத்திடம் சிக்கி, பணத்தையும் நிம்மதியையும் இழந்து தவிக்கும் மக்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தேனியில் நடந்துள்ளது.

தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டி கிராமம் முத்துராமலிங்கம் 4வது தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். விறகு வியாபாரம் செய்துவரும் மனோகரனுக்கு வைரமணி என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். மகள்களுக்குத் திருமணம் நடப்பதில் தொடர் தாமதம் இருந்துவந்ததால், மனோகரனும் வைரமணியும் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 10 நாள்களுக்கு முன்பு, மனோகரனின் வீட்டுக்கு வந்த முத்து என்பவர், தன்னை ஒரு ஜோதிடர் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

Muthu
Muthu

மனோகரன் வீட்டில் இல்லாத நிலையில், மகள்களின் ஜாதகத்தை எடுத்துக்கொடுத்து, முத்துவிடம் ஜோதிடம் பார்த்துள்ளார் வைரமணி. ஜாதகத்தைப் பார்த்த முத்து, பரிகாரம் செய்ய வேண்டும். அப்போதுதான் உங்கள் பிரச்னைகள் விலகும் எனக் கூறிவிட்டு தனது தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

5,000 பேர்… ரூ.100 கோடி… தேனி மக்களை ஏமாற்றிய போலி நிறுவனம்!

மனோகரன் வீட்டுக்கு வந்ததும், நடந்ததைக் கூறிய வைரமணி, பரிகாரம் செய்துவிடலாம் எனக் கணவரிடம் வற்புறுத்தியுள்ளார். அதைத்தொடர்ந்து பரிகாரம் செய்ய முத்துவை தொலைபேசியில் அழைத்த மனோகரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார். அழைப்பு கிடைத்ததும் மனோகரனின் வீட்டுக்கு வந்த முத்து, மந்திரங்கள் சொல்லி பூஜைகளைச் செய்துள்ளார். அப்போது, ``உங்க கஷ்டம் எல்லாம் நீங்க, புளி உருண்டை பரிகாரம் செய்ய வேண்டும்!” எனக் கூறியுள்ளார் முத்து. ``அதென்ன புளி உருண்டை பரிகாரம்?” எனக் கேட்டுள்ளார் வைரமணி.

Theni Police Station
Theni Police Station

``புளி உருண்டையில், தங்கச் சங்கிலியைப் புதைத்து உருட்டி, அதை செம்பில் வைத்து பூஜை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், இந்த வீட்டில் தங்கம் பெருகும்!” எனக் கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பி, தன் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரைப் பவுன் தங்கச் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துள்ளார் வைரமணி. கணவன், மனைவி இருவரையும் கண்களை மூடி கடவுளை வணங்கச் சொன்ன முத்து, தான் கொண்டுவந்த புளி உருண்டையை எடுத்து, தங்கச் சங்கிலி இருந்த புளி உருண்டைக்குப் பதிலாக மாற்றி வைத்துவிட்டு, பூஜையை முடித்து பணம் வாங்கிக்கொண்டு கிளம்பியுள்ளார்.

`லோனை நான் கட்டிக்கிறேன்; ஆயிரம் ரூபாய் வாங்கிக்கங்க!’ - தேனி பழங்குடியினப் பெண்களை அதிரவைத்த மோசடி

மூன்று நாள்கள் புளி உருண்டையைத் தொடக்கூடாது என முத்து கூறியதில் சந்தேகமடைந்து, பூஜை நடந்த அன்று இரவு, புளி உருண்டையை எடுத்துப் பார்த்த மனோகரன் மற்றும் வைரமணி இருவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. புளி உருண்டையில் தங்கச் சங்கிலி இல்லை! தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து, முத்துவை தேடி மனோகரன் மற்றும் சிலர் புறப்பட்டுள்ளனர். ஆனால், முத்து குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மூன்று நாள்களுக்குப் பிறகு நேற்று, தேனி புதிய பேருந்து நிலையத்தில் முத்துவைப் பார்த்த மனோகரனின் உறவினர் ஒருவர், மனோகரனுக்குத் தகவல் தெரிவிக்க கையும் களவுமாகப் பிடிபட்டார் முத்து. வைரமணியின் தங்கச் சங்கிலி, முத்துவின் கழுத்தில் மின்னியிருக்கிறது. தேனி காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்க, போலி ஜோதிடர் முத்து கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இது போன்ற ஆசாமிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி, மனோகரன் மற்றும் அவரது உறவினர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பினர் தேனி போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு