Published:Updated:

`சிறுமிக்கு நேர்ந்த துயரம்' - தேனி இளைஞருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை #TamilnaduCrimeDiary

மதுரை வீரன்
மதுரை வீரன்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த இளைஞர், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக, தேனி மகிளா நீதிமன்றம் 30 ஆண்டு கடும்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆண்டிபட்டி பூக்காரத்தெருவைச் சேர்ந்தவர் மதுரை வீரன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக ஆண்டிபட்டி போலீஸார், போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, தேனி மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று நீதிபதி தீபா தீர்ப்பு வழங்கினார்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக, மதுரை வீரனுக்கு 30 ஆண்டு கடும்காவல் தண்டனையும், 20,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், 4 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், சிறுமிக்கு தமிழக அரசின் உதவித்தொகை ரூபாய் 7 லட்சத்தை, தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ், ஒருமாத காலத்துக்குள் பெற்றத்தர வேண்டும் எனவும் அதிரடி தீர்ப்பளித்தார்.

அதிரவைக்கும் பெட்ரோல் பங்க் மோசடி... ஊட்டி சுற்றுலாப் பயணிகளே உஷார்! #TamilnaduCrimeDiary

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு, கடந்த 2012-ம் ஆண்டு போக்ஸோ சட்டம் கொண்டு வரப்பட்டது. போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் காவல்துறை மெத்தனம் காட்டுவதாக கடந்தாண்டு மே மாதம் வெளியான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 7 ஆண்டுகளில் போக்ஸோ சட்டத்தின்கீழ் நடைபெற்ற வழக்குகளில் சுமார் 2,950 பேர் விடுவிக்கப்பட்டிருப்பதும் ஏறத்தாழ 700 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

மதுரை வீரன்
மதுரை வீரன்

பாதிக்கப்பட்டவரின் தரப்பினர் சரியாக ஒத்துழைக்காததாலும் குற்றம் சாட்டப்பட்டவர் பெரும்பாலும் உறவினராக இருப்பதாலும் தங்களுக்குள்ளே சமரசம் செய்துகொள்கின்றனர். இதனால், போக்ஸோ வழக்குகளில் உரிய தண்டனை பெற்றுத் தருவதில் இடையூறு ஏற்படுவதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட தேனி மதுரை வீரனுக்கு, 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின் செல்ல