Published:Updated:

``நாங்கள் இருவரும்தான் குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்துக் கொன்றோம்!” - தேனியில் பெண்சிசுக் கொலை

கவிதா மற்றும் செல்லம்மாள்
கவிதா மற்றும் செல்லம்மாள்

சமீபத்தில், உசிலம்பட்டியில் பெண் சிசுவிற்குக் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் நடந்து 15 நாள்களே ஆன நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, பெண் சிசுவிற்கு எருக்கம் பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வறுமை காரணமாகவும் திருமணத்தின் போது அதிக செலவு செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காகவும் பெண் சிசுக்கள், கள்ளிப்பால் கொடுத்துக் கொலை செய்யப்படுவது தென் தமிழகத்தில் தொடர்ந்து நடந்துவந்தது. இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட தமிழக அரசு, 1992ம் ஆண்டு, தொட்டில் குழந்தைத் திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்படி, ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒரு தொட்டில் வைக்கப்பட்டது. பெண் குழந்தைகளை சுமை என நினைக்கும் பெற்றோர்கள், அந்தத் தொட்டிலில், தங்களது குழந்தைகளை விட்டுச் செல்லலாம். அக்குழந்தையைத் தொட்டில் குழந்தை மையம் மூலமாக, தமிழக அரசு தனது செலவில் வளர்த்து படிக்க வைக்கும். இத்திட்டத்தின் விளைவாக, பெண் குழந்தைகள் கள்ளிப்பால் கொடுத்துக் கொலை செய்யப்படுவது குறைந்தது. இந்நிலையில், மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தேனி மாவட்டத்தில் பெண் சிசு, கொலை செய்யப்பட்டிருப்பது, சமூக வெளியில் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கவிதாவின் வீடு
கவிதாவின் வீடு
``நாங்கள் இருவரும்தான் குழந்தைக்கு எருக்கம் பால் கொடுத்துக் கொலை செய்தோம்! குழந்தையின் உடலை வீட்டின் அருகே புதைத்துவிட்டோம்” என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது மொட்டனூத்து ஊராட்சி. இதன் அருகே உள்ளது ராமநாதபுரம் என்ற சிறிய கிராமம். போதிய மழை இல்லாத காரணத்தாலும், மானாவரி நிலத்தினை நம்பி வாழ முடியாத காரணத்தாலும், இக்கிராம மக்கள், திருப்பூர், கோவை போன்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது, மொத்தம் இரண்டே குடும்பம் மட்டும் வசிக்கும் இக்கிராமத்தில், முத்துச்சாமி – செல்லாம்மாள் குடும்பமும் ஒன்று.

முத்துச்சாமியின் மகன் சுரேஷ். கேரளாவில் கொத்தனார் வேலை பார்த்துவரும் சுரேஷிற்கும் கவிதா என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26ம் தேதி இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை மார்ச் 2ம் தேதி உடல்நிலை சரி இல்லாமல், இறந்துவிட்டதாகக் கூறி, வீட்டின் அருகே அடக்கம் செய்துள்ளனர். பிறந்து 6 நாள்களே ஆன குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் வரவே, விசாரணையில் இறங்கியது குழந்தைகள் நலக்குழு.

மொட்டனூத்து கிராமம்
மொட்டனூத்து கிராமம்

சுரேஷ் மற்றும் கவிதா இருவரிடமும் விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து, மொட்டனூத்து கிராம நிர்வாக அலுவலர் ஜோதியை விசாரணை செய்யுமாறு ஆண்டிபட்டி தாசில்தார் உத்தரவிடுகிறார். அதன் அடிப்படையில், விசாரணை செய்த ஜோதி, சுரேஷ் மற்றும் கவிதா தம்பதியர் மீது சந்தேகம் இருப்பதாக, ராஜதானி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கொரோனா அச்சம்… 10,000 தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம்? - தேனி கலெக்டர் ஆலோசனை

சந்தேகத்தின் அடிப்படையில், முத்துச்சாமி, செல்லம்மாள், சுரேஷ், கவிதா ஆகிய நால்வரையும் அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, கவிதா மற்றும் செல்லம்மாள், ”நாங்கள் இருவரும்தான் குழந்தைக்கு எருக்கம் பால் கொடுத்துக் கொலை செய்தோம்! குழந்தையின் உடலை வீட்டின் அருகே புதைத்துவிட்டோம்” என வாக்குமூலம் அளித்துள்ளனர். அதனை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஆண்டிபட்டி தாசில்தார் மற்றும் ஆண்டிபட்டி டி.எஸ்.பி மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் முன்னிலையில், கவிதாவை அழைத்துவந்த ராஜதானி போலீசார், குழந்தையைக் கொலை செய்ய எருக்கம் பால் எங்கிருந்து எடுக்கப்பட்டது எனக் கேட்டு, அந்த இடத்தினைக் கவிதாவைக் காட்டச் சொன்னார். பின்னர், குழந்தை புதைக்கப்பட்ட இடத்தினையும் காட்டச் சொன்னார். இறுதியாக, குழந்தை புதைக்கப்பட்ட இடத்தினை, கவிதாவின் மாமனார் முத்துச்சாமி மண்வெட்டியால் தோண்டினார். தொடர்ந்து அரசு மருத்துவர் மற்றும் குழுவினர், குழந்தையின் உடலைப் பிரேத பரிசோதனை செய்தனர்.

இது தொடர்பாக ராஜதானி போலீசாரிடம் பேசிய போது, “சம்பவம் நடந்த போது சுரேஷ் மற்றும் முத்துச்சாமி இருவரும் அங்கு இல்லை என விசாரணையில் தெரியவந்தது. எனவே, கவிதா மற்றும் செல்லம்மாள் இருவர் மீதும் ஐ.பி.சி 174, 302, 201, 120(b) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றனர்.

சமீபத்தில், உசிலம்பட்டியில் பெண் குழந்தைக்குக் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் நடந்து 15 நாள்களே ஆன நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, பெண் சிசுவிற்கு எருக்கம் பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`ஹை-டெக் அலுவலகம் டு தென்னந்தோப்பு..பெங்களூரு டு தேனி!' -கொரோனா அச்சத்தால் இடம்பெயர்ந்த ஐடி நிறுவனம்
அடுத்த கட்டுரைக்கு