தேனி: மனைவியுடன் பழக்கம்; குடும்பத்தில் விரிசல்! - உறவினரைக் கத்தியால் குத்திய கணவர்

அவருடன் சேர்ந்து அவரது மகன் ஜெயசூர்யாவும் பரமசிவத்தைத் தாக்கியதாகச் சொல்கிறார்கள். இதில், கழுத்து, கை, நெஞ்சு ஆகிய இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரமசிவம் பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 53). பெயின்டர் வேலை பார்த்துவரும் நாகராஜுக்கு, மகேஷ்வரி (வயது 39) என்ற மனைவியும், ஜெயசூர்யா என்ற மகனும், கோகிலவாணி என்ற மகளும் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் பெயின்டிங் வேலைக்காக தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரத்தைச் சேர்ந்த தன் உறவுக்காரரான பரமசிவம் (வயது 58) என்பவரைச் சொந்த ஊருக்கு அழைத்து வந்திருக்கிறார் நாகராஜ்.

இந்தநிலையில், பரமசிவத்துக்கும் மகேஷ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியதாகச் சொல்லப்படுகிறது. இதை அறிந்த நாகராஜ், இருவரையும் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
நாகராஜின் கண்டிப்பு காரணமாக, மகேஷ்வரியை தூத்துக்குடியிலுள்ள தனது சொந்த ஊருக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார் பரமசிவம். தனது மகன், மகளுடன் பலமுறை தூத்துக்குடிக்குச் சென்று மகேஷ்வரியை அழைத்திருக்கிறார் நாகராஜ். ஆனால், மகேஷ்வரி நாகராஜூடன் வர மறுத்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தூத்துக்குடியில் வசித்துவந்த பரமசிவமும் மகேஷ்வரியும், இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேனி பழைய மருத்துவமனை அருகேயுள்ள மிராண்டா லைன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியிருக்கிறார்கள்.
மகேஷ்வரி தேனியில் வசித்துவரும் தகவல் நாகராஜுக்குத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, நேற்று இரவு, தன் மகன், மகள், தாய் மூவரையும் அழைத்துக்கொண்டு, மகேஷ்வரியின் வீட்டுக்குச் சென்று அவரை அழைத்திருக்கிறார் நாகராஜ். மகேஷ்வரி அவருடன் வர மறுக்கவே, அங்கிருந்த பரமசிவத்துக்கும் நாகராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென தான் எடுத்துவந்திருந்த கத்தியை எடுத்து, பரமசிவத்தைக் குத்த முயன்ரிருக்கிறார் நாகராஜ். அவருடன் சேர்ந்து அவர் மகன் ஜெயசூர்யாவும் பரமசிவத்தைத் தாக்கியதாகச் சொல்கிறார்கள். இதில், கழுத்து, கை, நெஞ்சு ஆகிய பகுதிகளில் கத்திக் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரமசிவம் பலியானார். மகேஷ்வரி படுகாயங்களுடன் தப்பினார்.
தகவலறிந்து வந்த தேனி நகர் காவல்துறையினர், பரமசிவத்தின் உடலைக் கைப்பற்றி, தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மகேஷ்வரியும் சிகிச்சைக்காக கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மகேஷ்வரி புகாரின் பேரில் நாகராஜ், ஜெயசூர்யா இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.