தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன் (25). கூலித் தொழிலாளியான இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் சுகப்பிரியா (21) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யோகித் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் காதல் திருமணத்தை விரும்பாத அருண் பாண்டியனின் தந்தை பெரியகருப்பன் (53) மருமகளிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வந்த பெரியகருப்பன், மருமகள் சுகப்பிரியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மருமகள் சுகப்பிரியா, பேரக்குழந்தை யோகித்மீது மண்ணெண்ணெய் ஊற்றி `தீ பற்றவைத்துவிடுவேன்’ என மிரட்டியுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பெரியகருப்பன் மண்ணெண்ணெயில் நனைந்திருந்த மருமகள், பேரன் இருவர்மீதும் தீயைப் பற்றவைத்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இருவர் மீதும் தீப்பற்றி மளமளவென உடல் முழுவதும் பரவியதில், துடித்த சுகப்பிரியாவையும் யோகித்தையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி செய்யப்பட்டு இருவரும் மேல்சிகிச்சைக்கு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை யோகித் உயிரிழந்தான். சுகப்பிரியா மட்டும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். சுகப்பிரியா போலீஸாரிடம், "என் கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திவந்த நிலையில்தான். நானும் எனது குழந்தையும் தீ வைத்து எரிக்கப்பட்டோம்" என வாக்குமூலம் அளித்துள்ளார். அதனடிப்படையில், பெரியகருப்பன், அவர் மனைவி ஒச்சம்மாள், மகன் அருண்பாண்டியன், அவர் சகோதரி ஆகியோரைக் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.