தேனி: `எவ்வளவு நகையானாலும் விற்றுத் தருவேன்!' - 27 பவுன் நகையுடன் மாயமான நபர் கைது

நகைகளை விற்றுத் தருவதாகக் கூறி, 27 பவுன் நகையை எடுத்துக்கொண்டு மாயமான நபரை, போலீஸார் கைதுசெய்தனர்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி கம்பளி நாடார் தெருவைச் சேர்ந்த அப்பாஸ் என்பவரின் மகன் வாஜித் அகமது (வயது 27). இவர், கடன் பிரச்னை காரணமாக, தன்னிடமிருந்த 27 பவுன் நகைகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு, தேனியைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் அது பற்றிக் கூறியிருக்கிறார். அதைக் கேட்ட அவரது நண்பர், போடி சகாதேவன் தெருவைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகனான லலித்குமாரை, வாஜித் அகமதுவுக்கு அறிமுகம் செய்துவைத்திருக்கிறார்.

லலித்குமார், போடி இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக இருப்பதாக வாஜித் அகமதுவிடம் கூறியிருக்கிறார். அதை நம்பிய வாஜித், கடந்த மாதம் 6-ம் தேதி தன்னுடைய 27 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு போடிக்கு வந்து, லலித்குமாரைச் சந்தித்திருக்கிறார்.
அப்போது, நகைகளை லலித்குமாரிடம் காட்டிவிட்டு, தனது இருசக்கர வாகன கவரில் நகைகளை வைத்திருக்கிறார். அதை நோட்டம்விட்ட லலித்குமார், வாஜித் அகமதுவிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே, இருசக்கர வாகன கவரில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து சென்றிருக்கிறார்.

சிறிது நேரத்தில், தன்னுடைய நகைகள் திருடப்பட்டதை அறிந்த வாஜித் அகமது, போடி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரிக்க ஆரம்பித்தனர். இதை அறிந்த லலித்குமார் தலைமறைவானார்.
சுமார் 25 நாள்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த லலித்குமாரை, நேற்று ரோந்துப்பணியில் இருந்த போடி போலீஸார் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வாஜித் அகமதுவின் நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து லலித்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறும்போது,``எவ்வளவு நகையாக இருந்தாலும் விற்றுத் தருவதாக லலித்குமார் கூறியிருக்கிறார். அதை வாஜித் அகமது நம்பி ஏமாந்திருக்கிறார். லலித்குமார், போடி இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், வங்கி நிர்வாகம் அவரைப் பணி நீக்கம் செய்திருக்கிறார்கள். வாஜித் அகமதுபோல, இன்னும் எத்தனை பேரிடம் லலித்குமார் கைவரிசை காட்டியிருக்கிறார் என விசாரணை நடக்கிறது” என்றனர்.