Published:Updated:

` 2 லிட்டர் புற்றுநோய் எண்ணெய் ரூ.3.5 லட்சம்'- வாட்ஸ்அப் கால் மூலம் நூதன மோசடி; பிடிபட்ட நைஜீரியர்!

புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ எண்ணெய் விற்பனையில் பங்கு தருவதாகக் கூறி தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந்தவரிடம் ரூ.3.5 லட்சம் மோசடி செய்த நைஜீரியரை போலீஸார் கைதுசெய்தனர்.

சின்னமனூா் அருகே கருங்காட்டான் குளத்தைச் சோ்ந்தவா் ரிதம்பரநானந்தா (48). இவா் சின்னமனூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் நடத்திவருகிறாா். இவரிடம் மும்பையிலிருந்து வாட்ஸ்அப்பில் சோபியா என்பவர் தொடா்புகொண்டு பேசியிருக்கிறார். அவர் ரிதம்பரநானந்தாவிடம், தான் இங்கிலாந்தில் உள்ள மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் வணிகப் பிரிவில் பணியாற்றுவதாகக் கூறி அறிமுகமாகியிருக்கிறார். மேலும் புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறோம். அதில் பங்களிப்பு செய்தால் லாபத்தில் 50 சதவிகிதம் பங்கு தருகிறோம் எனக் கூறி ரிதம்பரநானந்தாவிடம் ரூ.3.5 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்திருக்கிறார்.

இது குறித்து ரிதம்பரநானந்தா தேனி சைபர் kரைம் போலீஸாரிடம் புகாரளித்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அங்கநாயகி தலைமையில் தனிப்படை அமைத்து மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில் மகாராஷ்டிரா மாநிலம், பால்ஹா் மாவட்டம், தானேவில் மோசடியில் ஈடுபட்டவர்கள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அங்கு சென்ற தனிப்படையினர், நைஜீரியா நாட்டைச் சோ்ந்த ஓலட்டியன் மேத்யூ (43) என்பவரைக் கைதுசெய்து, தேனிக்கு அழைத்து வந்தனர். அவரிடமிருந்து மூன்று செல்போன்கள், இரண்டு லேப்டாப்களைப் பறிமுதல் செய்தனர்.

நூதன மோசடி நடந்தது எப்படி?

வாட்ஸ்அப்பில் ரிதம்பரநானந்தாவை தொடர்புகொண்டவர்கள் தங்களுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கான சொல்ஜென்ஸ்மா பிரசா்வ் என்ற மருத்துவ எண்ணெய் தேவைப்படுகிறது. இந்த எண்ணெயை இங்கிலாந்தில் கொள்முதல் செய்தால் 7,500 அமெரிக்க டாலர் செலவாகும், இந்தியாவில் கொள்முதல் செய்தால் 4,500 அமெரிக்க டாலர்தான் செலவாகும். எனவே, புனேவில் உள்ள டாக்டர் கருணாவிடம் 2 லிட்டா் எண்ணெயைக் கொள்முதல் செய்து, டெல்லியில் உள்ள டாக்டர் ஹாரிசன் என்பவரிடம் கொடுக்க வேண்டும். அவா் அதன் தரத்தைப் பரிசோதித்து பெற்றுக்கொண்டு, மேலும் 2,500 லிட்டா் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு ஆா்டா் வழங்குவாா். அதில் கிடைக்கும் லாபத்தில் உங்களுக்கு 50 சதவிகிதம் பங்கு தருகிறோம் எனக் கூறியிருக்கிறார். இதை நம்பிய ரிதம்பரநானந்தா, டாக்டர் கருணாவுக்கு ரூ.3.5 லட்சம் பணத்தை அனுப்பிவைத்திருக்கிறார். பின்னர் பாா்சல் சேவை மூலம் 2 லிட்டா் மருத்துவ எண்ணெயைப் பெற்று டெல்லியில் உள்ள டாக்டர் ஹாரிசனிடம் கொடுத்திருக்கிறார்.அவா், மருத்துவ எண்ணெயின் தரத்தைச் சரிபாா்த்துவிட்டு மேலும் 23 லிட்டா் எண்ணெய் கொடுத்தால்தான், முதற்கட்டமாக 1,000 லிட்டா் எண்ணெய்க்கான கொள்முதல் ஆா்டா் மற்றும் பங்குத்தொகை வழங்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு ரிதம்பரநானந்தா மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

`ஆடையின்றி காட்டும் மாயக்கண்ணாடி; விலை ஒரு லட்சம்!' - மோசடி செய்த 4 பேர் கைது

தங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுவிட்டது என்பதையறிந்த மோசடிக் கும்பல் தொடர்பை துண்டித்துக்கொண்டு தலைமறைமாகிவிட்டனர். கைது செய்யப்பட்ட நைஜீரியரை போலீஸார் தேனி அழைத்துவந்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரிடமிருந்து எவ்வித தகவலையும் பெற முடியவில்லை. இதையடுத்து அவரை தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் வெளிநாட்டவர் என்பதால் சென்னை சைதாபேட்டை சப்-ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி. போலீஸார் விசாரணையில் இந்த மோசடியின் பின்னணியில் பெரிய நெட்வொர்க் இருப்பது தெரியவந்தது. தொடர் விசாரணையின் மூலம் இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைதுசெய்வோம் என தேனி சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு