Published:Updated:

`குட்கா வாங்கப்போறேன்!’ - தேனி போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த மதுரை நபர்

கைது செய்யப்பட்ட நால்வர்
கைது செய்யப்பட்ட நால்வர்

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம், ``நான், குட்கா வாங்கப்போறேன்” எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் மதுரையைச் சேர்ந்த நபர்.

தேனி - மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில், இன்று காலை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதுரையிலிருந்து தேனி நோக்கி வந்துகொண்டிருந்த டாடா இண்டிகா காரை மறித்த போலீஸார், ``எங்கே செல்கிறீர்கள்?” எனக் கேட்டுள்ளனர். அதற்கு முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்த அந்த நபரின் மீது சந்தேகமடைந்த போலீஸார், காரில் சோதனை செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

காரில் ரூ.4.30 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் சரவண தெய்வேந்திரன் மற்றும் உதவி ஆய்வாளர் ராமபாண்டியன் ஆகியோர் நடத்திய விசாரணையில், அந்த நபர், ``நான் குட்கா வாங்க தேனி போறேன்” எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆண்டிபட்டி போலீஸார், ``குட்கா வாங்கும் இடத்தைக் காட்டுங்கள்” எனக் கூறி, தேனிக்கு அழைத்து வந்துள்ளனர்.

பழுதான சைக்கிளில் 80 கி.மீ பயணம்.. பஸ் ஸ்டாப்பில் உறக்கம்.. மெய்சிலிர்க்க வைத்த அண்ணன் பாசம்!

நாகலாபுரம் அருகே உள்ள குடோனுக்கு அந்த நபர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கே ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குடோன் உரிமையாளர், பணியாளர் என மூவர் மற்றும் மதுரையிலிருந்து குட்கா வாங்க வந்த நபர் என நால்வரையும் போலீஸார் கைது செய்தனர்.

மதுரையில் இருந்து துரைராஜ் வந்த கார்.
மதுரையில் இருந்து துரைராஜ் வந்த கார்.
ஒரு வாரத்தில் 13 பேர்.. தேனி போலீஸுக்கு அதிர்ச்சிகொடுக்கும் கள்ளச்சாராயம்!

இது தொடர்பாக ஆண்டிபட்டி போலீஸார் தரப்பில் தெரிவிக்கும் போது, ``ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மூடப்பட்டுள்ளாதால், குட்கா, பான்மசாலா விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், மதுரையிலிருந்து துரைராஜ் என்ற நபர் ரூ.4.30 லட்சம் பணத்துடன், தேனியில் குட்கா வாங்கத் தைரியமாக வந்துள்ளார். அவரை வைத்து, குட்கா குடோன் உரிமையாளர் நவரத்தினவேல், குடோன் பணியாளர்கள் மணிகண்டன் மற்றும் ராஜகுரு ஆகியோரை கைது செய்திருக்கிறோம். 39 மூட்டை, 4 அட்டைபெட்டி ஆகியவற்றில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலாப் பொருள்களைக் கைப்பற்றியுள்ளோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு