`என் முன்னால சரிக்குச் சமமா பீடி குடிப்பியா?’ - தேனியில் ஓர் அதிர்ச்சி சம்பவம்!

தனக்குச் சமமாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த நபர் பீடி புகைத்ததால், அந்த நபர் அரிவாளால் தாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் தேனியில் நடந்திருக்கிறது.
தேனி மாவட்டம், போடி அருகே இருக்கிறது டொம்புச்சேரி கிராமம். பல்வேறு சமுதாய மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், அடிக்கடி பட்டியலினச் சமுதாய மக்களை, மற்றொரு சமுதாய மக்கள் தாக்குவது தொடர்கதையாகிவருகிறது. தற்போது, பட்டியல் இனச் சமுதாய நபர் ஒருவர் அரிவாளால் தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியிருக்கிறது.

டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (வயது24). இவர், அந்தக் கிராமத்திலுள்ள பட்டியலினச் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று அடிக்கடி பிரச்னைகள் செய்வதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, அந்தப் பகுதிக்குள் நுழைந்த அலெக்ஸ் பாண்டியன், மரத்தடியில் அமர்ந்து பீடி புகைத்துக்கொண்டிருந்த பழனிச்சாமி (வயது 45) என்பவர் அருகே சென்று அமர்ந்திருக்கிறார். தொடர்ந்து, தனக்கும் பீடி வேண்டும் என அவர் கேட்க, உடனே, தன்னிடமிருந்த பீடியை அவரிடம் கொடுத்திருக்கிறார் பழனிச்சாமி.

பீடியை பற்றவைத்த அலெக்ஸ் பாண்டியன், திடீரென தான் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து, `என் முன்னால சரிக்கு சமமா பீடி குடிப்பியா?’ எனக் கேட்டவாறு, பழனிச்சாமியின் சமுதாயத்தைப் பற்றி இழிவாகப் பேசி, அவரை அரிவாளால் தாக்கியிருக்கிறார். இதில், அவரின் இடது காது, அதன் கீழ்ப் பகுதி, கழுத்துப் பகுதி, கைகளில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர், பழனிச்சாமியை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்த பழனிச்செட்டிபட்டி காவல்துறையினர், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அலெக்ஸ் பாண்டியனைக் கைதுசெய்தனர்.