Election bannerElection banner
Published:Updated:

தேனி: `உங்க அக்கவுன்ட்ல ரூ.49,500 போட்டாச்சு!’- ஏ.டி.எம் மையத்தில் பணம் சுருட்டிய இளம்பெண்

மணிமேகலை
மணிமேகலை

ஏ.டி.எம் மையத்திலுள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் பணம் செலுத்துவதுபோல நடித்து, ஜவுளிக்கடை மேலாளரை ஏமாற்றிய இளம்பெண்ணை, தேனி நகர் காவல்துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). தேனி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜவுளிக்கடை ஒன்றில் மேலாளராக வேலை பார்த்துவருகிறார். வழக்கமாக, கடையின் வரவு, செலவு கணக்குகளைக் கையாளும் நாகராஜ், கடந்த ஜனவரி 25-ம் தேதி, ரூ.50,000-த்தை எடுத்துக்கொண்டு, தேனி-பெரியகுளம் சாலையிலுள்ள எஸ்.பி.ஐ வங்கிக்குச் சென்றிருக்கிறார். வங்கியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், வங்கி வளாகத்தில் இருக்கும், ஏ.டி.எம் மையத்திலுள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் பணத்தைச் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறார்.

ஏ.டி.எம்
ஏ.டி.எம்
தேனி: சுருளி அருவியில் கல்வெட்டை மறைத்து ரூ.5 லட்சத்தைச் சுருட்டிய வனத்துறை அதிகாரி!

அப்போது, அங்கு வந்த இளம்பெண் ஒருவர், நாகராஜுக்கு உதவி செய்வதாகக் கூறியிருக்கிறார். அந்தப் பெண்ணை நம்பி, தன்னிடமிருந்த ரூ.50,000-த்தை அவரிடம் கொடுக்க, அந்தப் பெண்ணோ, `இந்த இயந்திரத்தில் ரசீது வராது. நான் பணத்தைச் செலுத்துவிடுகிறேன்’ எனக் கூறி, இயந்திரத்தில் பணத்தை வைத்திருக்கிறார்.

மொத்த பணத்தில் ரூ.500 நோட்டை மட்டும் இயந்திரம் எடுத்துக்கொள்ளாததால், அதை நாகராஜ் கையில் கொடுத்துவிட்டு, `ரூ49,500-ஐ உங்கள் அக்கவுன்ட்டில் போட்டாச்சு’ எனக் கூறியிருக்கிறார். நாகராஜும் ஜவுளிக்கடைக்குத் திரும்பியிருக்கிறார். பணம் செலுத்தி பல மணி நேரம் ஆன நிலையில், வங்கிக் கணக்குக்குப் பணம் வரவில்லை என்பதை அறிந்த நாகராஜ், வங்கிக்குச் சென்று விசாரிக்க, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தேனி நகர் காவல் நிலையம்
தேனி நகர் காவல் நிலையம்

வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை எனவும், பணம் செலுத்தும் இயந்திரம் மூலம் பணம் எண்ணப்பட்டு இறுதியில் `கேன்சல்’ கொடுக்கப்பட்டது என்றும் வங்கி அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

தேனி:`சில நாள்கள் என்றார்; ஆறு மாதமாகியும் வரலை!’ - விவசாயிகளை அதிரவைத்த ரூ.2 கோடி பால் மோசடி

இது தொடர்பாக, தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் நாகராஜ், ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், ஆண்டிபட்டி அருகேயுள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரின் மனைவி மணிமேகலை (வயது 23) என்பவரைக் கைதுசெய்தனர்.

மணிமேகலை
மணிமேகலை

விசாரணையில், உசிலம்பட்டி மற்றும் விருதுநகர் பகுதிகளிலுள்ள ஏ.டி.எம் மையங்களில் இதே போன்று அவர் மோசடி செய்து பணம் சுருட்டியிருப்பதாகவும், அதற்காக கைதுசெய்யப்பட்டதாகவும் மணிமேகலை கூறியிருக்கிறார். மேலும் இவர் எங்கெல்லாம் ஏ.டி.எம் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது குறித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டிருக்கிறார்கள்.

கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஷ் கண்ணனைப் பிரிந்து தனியாக வாழ்ந்துவரும் மணிமேகலை, இளங்கலை கணினி அறிவியல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. `ஏ.டி.எம் மையங்களுக்குச் செல்லும் முதியவர்கள், இது போன்ற பெண்களிடம் உஷாராக இருக்க வேண்டும்’ என்கின்றனர் காவல்துறையினர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு