Published:Updated:

தேனி : 5 சென்ட் நிலம்; 150 செடிகள்! - மீண்டும் தலைதூக்குகிறதா கஞ்சா சாகுபடி?

கஞ்சாச் செடிகள்
கஞ்சாச் செடிகள்

மலைப்பகுதியில் கஞ்சா பயிர் செய்யப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீஸார் 150 கஞ்சாச் செடிகளை கண்டுபிடித்து அழித்தனர்.

தேனி மாவட்டம், கம்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதியில் கஞ்சா பயிர் செய்யப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து கடந்த சில நாள்களாக, கம்பம் மலைப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில், நேற்று காலை உத்தமபாளையம் டி.எஸ்.பி சின்னக்கண்ணு தலைமையில், ஆய்வாளர் சிலைமணி, உதவி ஆய்வாளர் திவான்மைதீன் மற்றும் தனிப்படை போலீஸார் கம்பம் மேற்கு வனத்துறை ரேஞ்சர் அன்பு தலைமையிலான வனத்துறையினர் ஆகியோர் மலைப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். போதை தடுப்புப் பிரிவு மோப்பநாய் வெற்றி இவர்களுக்கு உதவியாக வரவழைக்கப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை: கடலில் பண்டல் பண்டலாக மிதந்த கஞ்சா பொட்டலங்கள்! - மீட்டு வந்து ஒப்படைத்த மீனவர்கள்
மோப்ப நாய் வெற்றி
மோப்ப நாய் வெற்றி

இந்தநிலையில், கம்பம் மணிகட்டி ஆலமரம் மேற்கு மலையடிவாரப் பகுதியில் முள்செடிகள் இருக்கும் புதர்ப்பகுதிக்கு நடுவே சுமார் 5 சென்ட் இடத்தில் 150 கஞ்சாச் செடிகள் பயிர் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆறடி முதல் எட்டடி வரை நன்கு வளர்ந்த செடியாக அவை காட்சியளித்தன. கஞ்சாச் செடிகள் அனைத்தும் வெட்டி, தீவைத்து அழிக்கப்பட்டன.

இது குறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, ``அழிக்கப்பட்ட கஞ்சாச் செடிகளின் எடை சுமார் 500 கிலோ இருக்கலாம். அதன் மதிப்பு பல லட்சம் ரூபாய். இந்த வனப்பகுதியில் யார் கஞ்சா பயிர் செய்தது என விசாரித்துவருகிறோம். தமிழக-கேரள எல்லையிலும் சோதனையை அதிகப்படுத்தியிருக்கிறோம்” என்றனர்.

காரைக்கால்: கஞ்சா வியாபாரியைப் பிடித்த காவலருக்குப் பணியிடமாற்றமா?! - ஆளுநருக்குப் பறந்த புகார்
வெட்டி அழிக்கப்பட்ட கஞ்சாச் செடிகள்
வெட்டி அழிக்கப்பட்ட கஞ்சாச் செடிகள்

இது குறித்து தேனி மாவட்ட சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ``15 வருடங்களுக்கு முன்னர், தேனி மாவட்டத்தின் வருசநாடு, கம்பம் மலைப்பகுதியில் கஞ்சா பயிர் செய்யப்பட்டுவந்தது. காவல்துறையின் முயற்சியால் தற்போது கஞ்சா பயிர் செய்வது கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கஞ்சா பயிர் செய்யும் வழக்கம் ஆரம்பித்திருக்கிறது. இதை காவல்துறை கடும் நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு