Published:Updated:

தேனி: ஆர்.எஸ்.எஸ் பிரமுகரைத் தாக்கிய மர்ம நபர்கள்; முன் விரோதம் காரணமா? - போலீஸ் விசாரணை!

ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ரவிக்குமார்
News
ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ரவிக்குமார்

கம்பம் மெட்டு சாலையில் உள்ள ரவிக்குமாருக்கு சொந்தமான புளியந்தோப்பு அருகே இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் இவருக்கும் அப்துல் ரஜாக் என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டு கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(45). இவர் கம்பம் கூடலூர் சாலையில் ஆட்டோமொபைல் உறுதி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தர்ம ஜாக்ரண் பிரிவு மாவட்ட பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், ரவிக்குமார் நேற்றைய தினம் தனது கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் அவரைப் பின்தொடர்ந்த 4 பேர் ஹெல்மெட்டை கொண்டு அவரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். தலையில் பலத்த காயமடைந்த ரவிக்குமார் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ரவிக்குமார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

காயமடைந்த ரவிக்குமார்
காயமடைந்த ரவிக்குமார்

ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் தாக்கப்பட்ட தகவல் அறிந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், உத்தமபாளையம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே ஏராளமான இந்து அமைப்பினர் கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு முன் திரண்டு ரவிக்குமாரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் குற்றவாளிகளை விரைவில் பிடிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஜனவரி 2-ம் தேதி கம்பம் மெட்டு சாலையில் உள்ள ரவிக்குமாருக்கு சொந்தமான புளியந்தோப்பு அருகே இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் இவருக்கும் அப்துல் ரஜாக் என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டு கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ``சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் மர்ம நபர்களை தேடி வருகின்றன. காயமடைந்த நபருக்கு தலையில் மட்டுமே காயம் ஏற்பட்டிருக்கிறது, தவிர பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை'' என்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz