Published:Updated:

தொடர்பைத் துண்டித்தும் தொடர் தொல்லை; வீட்டுக்கு வரவைத்துக் கொலை செய்த பெண்! - தேனியில் பரபரப்பு

கொலை
கொலை ( மாதிரிப் படம் )

வளர்மதி விசாரணையில் காவலர்களிடம், ராஜா தன்னைப் பற்றித் தொடர்ச்சியாக மிக மோசமாக தகவல் பரப்பி வந்ததாகவும் அதனால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்!

தேனி மாவட்டத்தில் ராஜா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வளர்மதி என்னும் பெண் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாகக் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்,... தேனி மாவட்டம் போடி, நந்தவனம் தெருவைச் சேர்ந்தவர் வளர்மதி. இவருக்குத் திருமணமாகி, இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்துவருகிறார்கள். இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்னர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, விவாகாரத்து பெற்று, தனது இரண்டு மகள்களுடன் தனியாக வாழ்ந்துவருகிறார்.

ராஜா
ராஜா

இந்நிலையில், கேரள மாநிலம் இடுக்கியில் தனக்குச் சொந்தமான 15 ஏக்கர் ஏலத்தோட்டத்தில் வரும் வருமானத்தை வைத்து தனது இரண்டு மகள்களையும் படிக்க வைக்கிறார். அடிக்கடி ஏலத்தோட்டத்திற்குச் சென்றுவந்த வளர்மதிக்கு, கேரளாவில் ஜீப் ஓட்டும் ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜா, திருமணமாகி விவாகாரத்துப் பெற்றவர் என்பதால், வளர்மதி - ராஜா நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

`நீயா கொலை பண்ண..காமெடி பண்ணாத...!' - சரணடைய வந்தவரைத் திருப்பி அனுப்பிய தேனி போலீஸ்

இந்நிலையில், வளர்மதி - ராஜாவின் காதல் பற்றி வளர்மதியின் உறவினர்கள் சிலருக்குத் தெரியவர கண்டித்துள்ளனர். திருமண வயதில் இரண்டு மகள்களை வைத்துக்கொண்டு இச்செயலில் ஈடுபடுவது தவறு என உணர்ந்த வளர்மதி, ராஜாவின் தொடர்பைத் துண்டித்துள்ளார்.

தன்னுடன் இருந்த தொடர்பை வளர்மதி, சட்டெனத் துண்டித்ததால் ஆத்திரமடைந்த ராஜா, வளர்மதிக்கு அடிக்கடி போன் செய்து டார்ச்சர் செய்துள்ளார். கூடவே, ஆபாசமாகப் பேசி, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வளர்மதியின் உறவினர்களிடம் சில பொய்யான தகவல்களைக் கூறி வளர்மதியின் உறவினர்கள் மத்தியில் கெட்டபெயரை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அனைத்திற்கும் பழிவாங்கக் காத்திருந்த வளர்மதி, நேற்று, மகள்கள் இல்லாத நேரத்தில் போடியில் உள்ள தனது வீட்டிற்கு ராஜாவை அழைத்துள்ளார்.

வளர்மதி
வளர்மதி

கோபம் தணிந்து மீண்டும் தன்னுடன் பழக இருக்கிறார் வளர்மதி என நினைத்து வந்த ராஜாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிற்குள் ராஜா வந்ததும், வீட்டுக் கதவைப் பூட்டிய வளர்மதி, ராஜாவின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி, மறைத்துவைத்திருந்த அரிவாளால், ராஜாவை கண்மூடித்தனமாக வெட்டியுள்ளார். கழுத்து, கை, வயிறு ஆகிய இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்து, குடல் வெளியே வந்து சம்பவ இடத்திலேயே ராஜா பலியானார். அக்கம்பக்கத்தினர் ராஜாவின் அலரல் சத்தம் கேட்டு, போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போடி போலீஸார், ராஜாவின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வளர்மதியைக் கைது செய்தனர். இச்சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வளர்மதி விசாரணையில் காவலர்களிடம், ராஜா தனது உறவினர்களிடமே தன்னைப் பற்றித் தொடர்ச்சியாக மிக மோசமாகத் தகவல் பரப்பி வந்ததாகவும் அதனால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்!

அடுத்த கட்டுரைக்கு