Published:Updated:

`45 ஆயிரம் வாடகை; 80 லட்சம் அட்வான்ஸ்' - மோசடிக் கும்பலால் தேனி இளைஞருக்கு நேர்ந்த கதி!

எம்.கணேஷ்

வேலையில்லாத இளைஞரை குறிவைத்து, பண ஆசை காட்டி மோசடி செய்த சம்பவம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் கோபுரம்
செல்போன் கோபுரம்

ஆண்டிபட்டி அருகே இளைஞர் ஒருவரது இடத்தில் செல்போன் கோபுரம் அமைத்துத் தருவதாகக் கூறி பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் சதீஸ் (வயது 18). இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிவருகிறார்.

செல்போன் கோபுரம்
செல்போன் கோபுரம்

இந்த நிலையில், இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. மறுமுனையில் பேசிய நபர், ``உங்களுக்குச் சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க இருக்கிறோம். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் அதற்கான அனைத்து வேலைகளையும் செய்யும். இடம் மட்டும் கொடுங்கள் மாதம் 45 ஆயிரம் ரூபாய் வாடகை கிடைக்கும். அதற்கு முன்னதாக, அந்த நிறுவனம் உங்களுக்கு முன்தொகையாக 80 லட்சம் ரூபாய் கொடுக்கும்” என பேசியுள்ளனர். அதிக பணம் கிடைக்கும் என எண்ணிய சதீஸ், அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி, செல்போன் கோபுரம் அமைத்து தர, வாடகை ஒப்பந்தம் செய்ய என ஆறு தவணைகளாக ரூபாய் 1 லட்சத்து 93 ஆயிரத்தை சதீஸிடம் இருந்து பெற்றிருக்கிறது அந்த மோசடிக் கும்பல். பணத்தை கொடுத்த பின்னர், அவர்களது தொலைபேசி எண்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றதால், சந்தேகமடைந்த சதீஸ், கடமலைக்குண்டு காவல்நிலையத்துக்கு வந்து புகார் தெரிவித்தார்.

இடம் மட்டும் கொடுங்கள் மாதம் 45,000 ரூபாய் வாடகை கிடைக்கும். அதற்கு முன்னதாக, அந்த நிறுவனம் உங்களுக்கு முன்தொகையாக 80 லட்சம் ரூபாய் கொடுக்கும்.
மோசடி கும்பல்

பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கை வைத்து விசாரணையைத் தொடங்கிய போலீஸார், அது, டெல்லியைச் சேர்ந்த பாபு என்பவரின் வங்கிக்கணக்கு எனக் கண்டறிந்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. வேலையில்லாத இளைஞரை குறிவைத்து, பண ஆசை காட்டி மோசடி செய்த சம்பவம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.