Published:Updated:

` என் அம்மாவை எப்படி அடிக்கலாம்?' -தேனியில் தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்

குடிபோதையில், தாயை அடித்த தந்தையை கட்டையால் அடித்துக் கொலைசெய்த மகனை போலீஸார் கைதுசெய்தனர்.

Thevathanapatty
Thevathanapatty

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமம், காமக்காபட்டி. இங்கு வசிக்கும் தனபாலன் என்பவர், தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவி பஞ்சவர்ணத்திடம் சண்டை இடுவதாகக் கூறப்படுகிறது.

நேற்று இரவும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும், தன் மனைவியை அவர் கடுமையாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

Thevathanapatty Police Station
Thevathanapatty Police Station

இதைக் கண்ட மகன் ஸ்ரீதர், தன் தந்தையைத் தடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தனபாலன், ஸ்ரீதரையும் அடித்துள்ளார். அதனால், கோபமடைந்த ஸ்ரீதர், தந்தையைப் பிடித்துத் தள்ளவே, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பின்னர், வீட்டில் இருந்த கட்டையை எடுத்து, தனபாலனை தலை மற்றும் உடலில் கடுமையாகத் தாக்கியுள்ளார் ஸ்ரீதர். இதில், படுகாயமடைந்த தனபாலன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்ரீதரும் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வந்த தேவதானப்பட்டி காவல்துறையினர், ஸ்ரீதரைக் கைதுசெய்தனர். தனபாலன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கைதான ஸ்ரீதர்
கைதான ஸ்ரீதர்

இதுதொடர்பாகப் பேசிய தேவதானப்பட்டி போலீஸார், ``குடிபோதையில் தினமும் தகராறு செய்துவந்திருக்கிறார் தனபாலன். சம்பவத்தன்று மகனும் தந்தையும் குடிபோதையில் இருந்துள்ளனர். தகராறு செய்யும் தந்தையைத் தட்டிக்கேட்டுள்ளார் மகன். இருவருக்கும் இடையே மோதல் ஏற்றப்பட்டு, அது ஒருகட்டத்தில் கொலையில் முடிந்திருக்கிறது. குடிபோதையில் ஏற்படும் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. ஏதாவது குற்றச்செயல் நடந்தால், முடிவில் குற்றவாளி குடிபோதையில் இருப்பது தெரியவருகிறது” என்கின்றனர் ஆதங்கத்துடன்.