Published:Updated:

50 போலீஸார்.. துப்பாக்கிச்சண்டை... கேரளாவில் மாவோயிஸ்ட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை!

கேரள மாநிலம், பாலக்காடு அருகே மஞ்சகட்டி மலை பகுதியில் தண்டர் போல்ட் போலீஸாருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூன்று மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.

கேரள போலீஸார்
கேரள போலீஸார்

கேரள மாநிலம் வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட வனப்பகுதி மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியாகும். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் உள்ள 30 மாவட்டங்களுக்கு மாவோயிஸ்ட்டுகளால் ஆபத்து ஏற்பட உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதில் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை கேரள அரசுக்கு தகவல் அனுப்பியது.

கேரள போலீஸார்
கேரள போலீஸார்

இதனிடையே, பாலக்காடு மாவட்டம் மஞ்சக்கட்டி மலைப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக கேரள அதிரடிப்படையான தண்டர்போல்ட் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை 50 போலீஸார் அவர்களை பிடிக்க துப்பாக்கியுடன் சென்றனர். போலீஸார் வந்ததையறிந்த மாவோயிஸ்ட்கள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. பதிலுக்கு போலீஸாரும் சுட்டனர். சுமார் ஒரு மணி நேரம் சண்டை நீடித்தது. தண்டர்போல்டு போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில், பெண் உட்பட 3 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்துள்ளனர்.

மொத்தம் ஏழு மாவோயிஸ்ட்களில், மூன்று பேர் உயிரிழக்க, நான்கு பேர் தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி, சுரேஷ், ஸ்ரீமதி ஆகிய மூன்று மாவோயிஸ்ட்கள் உயிரிழிந்துள்ளதாகவும், இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்ட்களிடம் இருந்து வெடி மருந்துகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின்போது, போலீஸார் சிலரும் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு பாலக்காடு எஸ்.பி விக்ரம் சிவா, மாவட்ட சப் கலெக்டர் பாண்டியன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் பாலக்காட்டில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.