Published:Updated:

மண்வெட்டி திருடியதாக அடித்த ஆசிரியர்! - மனமுடைந்து விபரீத முடிவெடுத்த 9-ம் வகுப்பு மாணவன்

கவியரசன்
கவியரசன்

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன், மண்வெட்டி திருடியதாகக் கூறி, பள்ளி ஆசிரியர் அடித்ததில், மனமுடைந்து வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தேனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது டி.சிந்தலச்சேரி கிராமம். வேல்முருகன் - ஆரோக்கியம்மாள் தம்பதிக்கு தனுஷ் மற்றும் கவியரசன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இளைய மகனான கவியரசன், அப்பகுதியில் உள்ள அமல அன்னை மேல்நிலைப்பள்ளியில் படித்துவருகிறார். வேல்முருகன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதால், தண்ணீர், பழம், கொய்யாப்பழம் வியாபாரம் செய்து தன் குழந்தைகளைப் படிக்க வைத்திருக்கிறார் தாய் ஆரோக்கியம்மாள்.

`தண்ணீர் தொட்டிக்கு கீழே விளையாட்டு!'- சிமென்ட் கல்வெட்டால் தேனி சிறுமிக்கு நேர்ந்த சோகம்
Representational Image
Representational Image

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், பள்ளிக்கு அருகே உள்ள தோட்டம் ஒன்றில் இருந்த இரண்டு மண்வெட்டிகளைக் காணவில்லை என்றும் பள்ளி மாணவர்கள் யாரேனும் எடுத்திருக்கலாம் எனவும் தோட்டத்தின் உரிமையாளர் செபாஸ்டீன், பள்ளி ஆசிரியர் திரவியத்திடம் புகார் கூறியிருக்கிறார்.

அதன் அடிப்படையில், மண்வெட்டியை யார் திருடியது என திரவியம் விசாரித்திருக்கிறார். கவியரசனை மண்வெட்டியுடன் பார்த்ததாக அவரிடம் சிலர் தகவல் சொன்னதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து கவியரசனை அழைத்து, அவரிடம் திரவியம் விசாரித்திருக்கிறார். அப்போது, மண்வெட்டியைத் தான் எடுக்கவில்லை என கவியரசன் கூறியதாகவும், ஆனால், அதை நம்பாத திரவியம், கடந்த ஒருவார காலமாக கவியரசனை பள்ளியில் பார்க்கும்போதெல்லாம் மிரட்டி, அடித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த கவியரசன், இன்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

வீட்டுக்கு வந்த ஆரோக்கியம்மாள், மகன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மகனை மீட்டு, தேவாரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். தொடர்ந்து, தேனி அரசு மருத்துவமனைக்கு கவியரசன் அனுப்பிவைக்கப்பட்டார். தேனி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், கவியரசனைப் பரிசோதித்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாக கூறினார்கள்.

தேவாரம்
தேவாரம்
`மதுபோதையில் அத்துமீறிய மகன்!' -தேனி படுகொலை விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

தந்தை இல்லாமல், தாயின் அரவணைப்பில் வளர்ந்த கவியரசன் இறப்புக்குக் காரணமான பள்ளி ஆசிரியர் திரவியத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கவியரசனின் உறவினர்கள், தேவாரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள். `மண்வெட்டி திருடியதாக கூறி, மாணவனை ஒருவாரகாலமாக அடித்துத் துன்புறுத்திய ஆசிரியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து, அவரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும்' என்று கொதிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு