Published:Updated:

பெங்களூரு: `திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டியிருக்கிறார்கள்!’ - கொதிக்கும் காங்கிரஸ்

பெங்களூரு கலவரம்
பெங்களூரு கலவரம்

எம்.எல்.ஏ அகண்ட சீனிவாசமூர்த்தி சிறுபான்மை சமுதாயத்தினர் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்திருக்கிறார். இதைப் பிடிக்காத சிலர் எம்.எல்.ஏ மீது அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும். என்ற நோக்கத்தில் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

பெங்களூரு புலிகேசிநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் அகண்டசீனிவாச மூர்த்தி. இவர், பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவருடைய அக்கா மகன் நவீன் (வயது 22). இவர் தன் முகநூல் பதிவில் கடந்த 11-ம் தேதி மாலை 6 மணிக்கு முகமது நபிகள் பற்றி அவதூறானக் கருத்தைப் பதிவு செய்துள்ளார். அது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. அதையடுத்து பதிவிட்ட அரை மணி நேரத்தில் சிறுபான்மை அமைப்பைச் சேர்ந்த சிலர் நவீனின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். நவீன் வீட்டில் இல்லாததால் பெங்களூரு தேவரஜீவனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள்.

பெங்களூரு கலவரம்
பெங்களூரு கலவரம்

உடனே நவீனைக் கைது செய்ய வேண்டுமென அழுத்தம் கொடுத்தனர். காவல்துறையினர் 2 மணி நேரத்தில் விசாரணை செய்து கைது செய்வதாக உறுதியளித்தனர். அதற்குள் சில சிறுபான்மை அமைப்பைச் சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் கூடி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். இதனால் கோபமடைந்தவர்கள் தேவரஜீவனஹள்ளி, காடுகொண்டஹள்ளி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தீ வைத்துக் கொளுத்தியதோடு காவலர்கள் மீது கற்கள் கொண்டு வீசினார்கள். அங்கிருந்த காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைத்து எரித்தார்கள்.

பிறகு, எம்.எல்.ஏ அகண்ட சீனிவாசமூர்த்தி வீடு உள்ள காவல் பைர சந்திரா பகுதிக்குச் சென்றவர்கள், அத்தெருவில் நிறுத்தப்பட்டிருந்த டூ வீலர், ஆட்டோ, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தையும் தீ வைத்துக் கொளுத்தினார்கள். எம்.எல்.ஏ வீட்டுக்குள் புகுந்து பணம், நகைகளைக் கொள்ளையடித்தவர்கள் வீட்டை தீ வைத்துக் கொளுத்தி கோர தாண்டவம் ஆடினார்கள். வீட்டில் யாரும் இல்லாததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதனால் இப்பகுதி முழுவதும் போர்க்களமாகக் காட்சி அளித்தது. காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகள் வீசியதோடு இறுதியாக நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

பெங்களூரு கலவரம்
பெங்களூரு கலவரம்

இதில் யாசின் பாஷா, வாஜித் அகமது, ஷேக்சுதீன் என மூன்று பேர் பலியானார்கள். கலவரக்காரர்கள் தரப்பில் குண்டடிப்பட்டு 5 பேரும், காவல்துறைத் தரப்பில் 50-க்கும் மேற்பட்டவர்களும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இக்கலவரத்தில் 100-க்கும் மேற்பட்ட டூவிலர்களும், 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும், 30-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களும், 3 பேருந்துகளும், ஐந்தாறு வீடுகளும் தீக்கிரையாகி இருக்கின்றன. தற்போது இப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கலவரம் நடந்த பகுதி சிறுபான்மை சமூகத்தினரும் தமிழர்களும் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் இக்கலவரத்தில் அதிகம் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபற்றி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம், ``பெங்களூரு கலவரம் திட்டமிட்டு ஒரு சிலரால் நடத்தப்பட்டிருக்கிறது. எங்க எம்.எல்.ஏ அகண்ட சீனிவாசமூர்த்தி சிறுபான்மை சமுதாயத்தினர் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்திருக்கிறார். அவர்களும் எம்.எல்.ஏ மீது மிகுந்த பற்றுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

பெங்களூரு: `திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டியிருக்கிறார்கள்!’ - கொதிக்கும் காங்கிரஸ்

இத்தொகுதியில் சிறுபான்மைச் சமுதாயம் பெரும்பான்மையாக இருந்தும் தொடர்ந்து இப்பகுதியில் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார். இதைப் பிடிக்காத சிலர் எம்.எல்.ஏ மீது அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்திருக்கிறார்கள். இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட சில சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதைப் பி.ஜே.பி அரசு சரியாகக் கையாள வேண்டும். இக்காலத்திலும் சிறுபான்மை மக்களையும், காங்கிரஸ் கட்சியையும் யாராலும் பிரிக்க முடியாது'' என்றார்.

பெங்களூரு: `இஸ்லாமிய இளைஞர்கள் எங்களை மீட்டனர்!’ - ஃபேஸ்புக்கில் பதிவிட்டவரின் தாய் பகிர்ந்த சம்பவம்
அடுத்த கட்டுரைக்கு