Published:Updated:

`அதிகாலை 4 மணிக்கு எனக்காகக் காத்திருந்தனர்!’ -உன்னாவில் எரிக்கப்பட்ட பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

பெண் எரிக்கப்பட்ட இடம்
பெண் எரிக்கப்பட்ட இடம் ( ANI )

உன்னாவ் பகுதியில் நேற்று உயிருடன் எரிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த கொடுமை பற்றி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயதுப் பெண் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரும் அவரது தந்தையும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிவம் திரிவேதி மற்றும் சுபம் திரிவேதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வன்கொடுமை
வன்கொடுமை
மாதிரி புகைப்படம்

அவர்களில் ஒருவர் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரைத் தேடப்படும் நபராக அறிவித்தது போலீஸ். மற்றொருவர் கடந்த மாதம் 30-ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இதே பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்துக்குச் சென்ற அந்தப் பெண்ணை வழிமறித்த ஐந்து பேர் கொண்ட கும்பல், அவர் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்துள்ளது.

90 சதவிகிதம் தீக்காயமடைந்த அந்தப் பெண், போலீஸாரால் மீட்கப்பட்டு முதலில் உன்னாவ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு அங்கிருந்து லக்னோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கும் அவருக்குத் தகுந்த சிகிச்சைகள் அளிக்க முடியாததால் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்
டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்
ANI

``தீ காயங்களால் பாதிக்கப்பட்ட பெண் மிகவும் மோசமான நிலையில் உள்ளார். அவர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. தற்போது உயிர் காக்கும் கருவிகள் மூலம் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 72 மணிநேரங்கள் கழித்தே அவரின் நிலை பற்றி உறுதியாகக் கூறமுடியும்” என டெல்லி மருத்துவர் சுனில் குப்தா தெரிவித்துள்ளார்.

`எங்களுக்கு எதிராக நீதிமன்றம் போகலாமா?!' -உ.பி-யில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

உடல்நிலை மிகவும் மோசமாக உள்ள நிலையிலும் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றியும் குற்றவாளிகளைப் பற்றியும் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் அந்தப் பெண். அதில், “நேற்று பாலியல் வழக்கு தொடர்பான விசாரணை ரேபரேலி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்தது. அதற்காக அதிகாலை 4 மணிக்கு நான், எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ரயில் நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது வழியில் ஐந்து பேர் கொண்ட கும்பல் (அவர்களின் பெயர்களுடன் கூறியுள்ளார்) நின்றுகொண்டிருந்தது. அவர்கள் சாதாரணமாக நின்றுகொண்டிருப்பதாகவே நினைத்தேன். பின்னர் என்னைச் சுற்றிவளைத்தபோதுதான், அவர்கள் எனக்காகக் காத்திருப்பதை அறிந்தேன்.

பெண் எரிக்கப்பட்ட இடம்
பெண் எரிக்கப்பட்ட இடம்
ANI

முதலில் அந்தக் கும்பல் ஒரு கட்டையால் என் காலில் அடித்தனர். வலி தாங்கமுடியாமல் நான் கீழே விழுந்தேன். பிறகு ஒரு கத்தியால் என் கழுத்துப் பகுதியில் குத்தினர். தொடர்ந்து என் மீது பெட்ரோல் ஊற்றி மிகவும் சாதாரணமாகக் கொளுத்திவிட்டனர். சூடு தாங்கமுடியாமல் நான் அலறிக்கொண்டே மக்கள் உள்ள பகுதியை நோக்கி ஓடினேன். என்னைப் பார்த்த மக்கள் உடனடியாக காவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்தப் பெண்ணின் உடலில் தீவைத்த ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர், முன்னதாக நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய சிவம் மற்றும் சுபம் ஆகியோர் ஆவர்.

இதற்கிடையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் அளித்த எஃப்.ஐ.ஆர் அறிக்கை வெளியில் வந்துள்ளது. அதில், “நானும் சிவனும் நெருங்கிப் பழகி வந்தோம். ஒரு கட்டத்தில் என்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக சிவம் கூறினார். நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.

கைது
கைது
மாதிரி புகைப்படம்

`நமது உறவைப் பொதுமக்கள் முன்னிலையில் தெரியப்படுத்துவேன்' என்று கூறினேன். அதற்கு அவர், வெளியில் சொன்னால் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார். எங்களுக்குள் ஏற்பட்ட சண்டை மிகவும் பெரிதானது.

பின்னர் அவரிடமிருந்து விலகி இருக்க முடிவு செய்த நான் 2018-ம் ஆண்டு இறுதியில் ரேபரேலியில் உள்ள என் உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன். சரியாக டிசம்பர் 12, 2018 அன்று எனக்குப் போன் செய்த சிவனின் நண்பர் சுபம், எங்கள் இருவரையும் சமரசம் செய்து வைப்பதாகக் கூறி அழைத்தார். நானும் நம்பிச் சென்றேன். அப்போதுதான் பாலியல் வன்கொடுமை நடந்தது” எனக் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு