Published:Updated:

விழுப்புரம்: காவலர் மனைவியை தாக்கி கொள்ளை! - `பகல் கொள்ளையன்’ சிக்கியது எப்படி?

கொள்ளையன்
கொள்ளையன்

விழுப்புரத்தை சேர்ந்த காவலர் ஒருவரின் மனைவியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன், அண்மையில் காவலர்களை பார்த்து தப்பி செல்லும் போது தவறி விழுந்து போலீஸாரிடம் சிக்கினான்.

விழுப்புரம் அடுத்த மரகதபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். சென்னையில் ஆயுதப்படை காவலாராக உள்ளார். செஞ்சியின் அருகே உள்ள மாமனார் ஊருக்கு, தன்னுடைய கர்ப்பிணி மனைவி கவியரசி மற்றும் இரண்டு வயதுடைய மகனுடன் கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். விழுப்புரத்திலிருந்து 2கி.மீ சென்றதும் மருத்துவமனை பரிசோதனைக்கு செல்லும் அட்டையை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டதாக கணவரிடம் கூறியுள்ளார் கவியரசி. வீடு அருகிலேயே உள்ளது என்பதால், சாலை ஓரமாக மரத்தடியில் தன் மகனுடன் மனைவியை நிற்க சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் முத்துக்குமார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், கவியரசி அணிந்திருந்த நகைகளை கேட்டு மிரட்டியுள்ளனர். பின், 'நகைகளை தரவில்லை எனில் குழந்தையை கொன்றுவிடுவேன்' என கூறியும் மிரட்டியுள்ளனர்.

அப்போதும் கவியரசி நகைகளை தர மறுத்ததால் டி வடிவ இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு கவியரசி அணிந்திருந்த 11 பவுன் நகைகளை பறித்துச் சென்றுள்ளான். இச்சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படி தப்பித்து சென்றவன் சிறிது தூரத்தில் தடுமாறி விழுந்துள்ளான். அப்போது ஒரு கால் செருப்பு, ஸ்க்ரூட்ரைவர் போன்றவை கீழே விழுந்துள்ளது. அவற்றை சேகரித்து, விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

விழுப்புரம் எஸ்.பி ராதாகிருஷ்ணன்
விழுப்புரம் எஸ்.பி ராதாகிருஷ்ணன்

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனின் உத்தரவின்பேரில் நகர டி.எஸ்.பி.நல்லசிவம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று முன்தினம் போலீஸார் விழுப்புரம், ஏனாதிமங்கலம் சாலைப் பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் போலீஸை கண்டதும் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அச்சமயத்தில் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கிய அந்த நபர் தவறி விழுந்ததில் அவருக்கு வலது கை முறிவு ஏற்பட்டதாக கூறுகிறது போலீஸ் தரப்பு. உடனே அவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அந்நபரை விசாரித்தபோது, 'கவியரசியை தாக்கி நகை பறிப்பில் ஈடுபட்டது நான் தான்' என ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த மிள்ளிகிராம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் அறிவழகன் என்பது தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 11 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. கொள்ளையனை விசாரித்தபோது, வினோதமான முறையில் கொள்ளையில் ஈடுபட்டுவந்தது தெரியவந்துள்ளது.

``தினமும் காலையில் வேலைக்கு செல்பவர்களை போலவே தயாராகி வரும் அறிவழகன், கையில் ஸ்க்ரூட்ரைவர், ஸ்பேனர் போன்ற பொருட்களை எடுத்துக்கொண்டு நேராக நெல்லிக்குப்பம் அருகே உள்ள மதுபான கடைக்கு சென்று மதுஅருந்துவதும். அதன்பின், ஆட்கள் நடமாட்டம் இல்லாத தனி வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் உலா வருவது வழக்கமாம்.

கொள்ளை.
கொள்ளை.

இரவு நேரங்களில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களுக்கு மத்தியில், பகல் நேரத்தில் கொள்ளையடிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்துள்ளான். குறிப்பாக தனியாக வீடுகள் இருந்தால் அங்கு கைவரிசையை காட்டிவிடுவானாம். அவன் கைவரிசை காட்ட துவங்கும் வீடுகளுக்கு அருகாமையில் தப்பித்து செல்வதற்கு வசதியாக அடர்ந்த மரங்கள், கரும்பு தோட்டம் போன்றவை இருப்பதை உறுதி செய்து கொண்டு செயலில் இறங்குவானாம். அதே போன்று ஒரு நாள், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சாலையோரமாக தன் குழந்தையுடன் கவியரசி நின்றிருப்பதை பார்த்து அங்கு சென்றுள்ளான். பின், கவியரசியை மிரட்டி, இரும்பு கம்பியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளான்” இத்தகவல் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தெரிவிக்கும் காவல்துறை தரப்பு அவன் கூறியதை கேட்டு திகைத்துப் போனதாகவும் கூறுகின்றனர். கைதான அறிவழகன் மீது, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஏற்கனவே சுமார் 25 திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறுகிறது காவல்துறை. விசாரணைக்கு பின், அந்நபரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் காவல் துறையினர்.

அடுத்த கட்டுரைக்கு