Published:Updated:

புதுக்கோட்டை: புருனே முட்டை வியாபாரி வீட்டில் 850 சவரன் நகை திருட்டு - கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை!

கொள்ளை நடந்த வீடு
News
கொள்ளை நடந்த வீடு

கொள்ளையர்கள் இரவுநேரத்தில் திட்டமிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், அடையாளம் தெரியாமல் இருக்கப் பீரோ முழுவதும் கொள்ளையர்கள் மிளகாய்ப்பொடியைத் தூவி விட்டுச் சென்றிருப்பதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜகுபர் சாதிக் (45). இவர் தென் கிழக்கு ஆசிய நாடான புருனேவில் கடந்த சில வருடங்களாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு சுமார் 10 இடங்களில் முட்டை விற்பனைக் கடைகளையும், பல்பொருள் அங்காடி ஒன்றும் அவர் நடத்தி வருகிறாராம். இவருக்குக் கோபாலப்பட்டினம் நடுத்தெருவில் சொந்த வீடு இருக்கிறது. அவ்வப்போது ஊருக்கு வரும்போது, இந்த வீட்டில் தான் அவர் தன் குடும்பத்துடன் தங்குகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் வந்து சென்ற நிலையில், வீடு பூட்டியே கிடந்துள்ளது. இந்த நிலையில் தான், ஜகுபர் சாதிக் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த முகமது உசேன் என்பவர் எதிர்பாராத விதமாக ஜகுபர் சாதிக்கின் வீட்டைப் பார்க்க வந்திருக்கிறார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, உடனே, ஜகுபர் சாதிக்கிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை: புருனே முட்டை வியாபாரி வீட்டில் 850 சவரன் நகை திருட்டு - கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை!

அதன்பின்பு தான், தனது வீட்டிற்குள் 850 சவரன் நகைகள் இருந்ததாக ஜகுபர் சாதிக் கூறியுள்ளார். உடனே, இதுபற்றி முகமது உசேன், வீட்டின் பூட்டை உடைத்து 850 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக மீமிசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மீமிசல் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டின் அனைத்து அறைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது. அதோடு, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 850 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கொள்ளையர்கள் இரவுநேரத்தில் திட்டமிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், அடையாளம் தெரியாமல் இருக்கப் பீரோ முழுவதும் கொள்ளையர்கள் மிளகாய்ப்பொடியைத் தூவி விட்டுச் சென்றிருப்பதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மீமிசல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 850 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz