திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன?#DoubtOfCommonMan

ராமலிங்கம் மதம் மாற்றம் குறித்து பேசியவர்களைத் தட்டிக் கேட்டதுடன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோபமாகப் பேசி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார்.
``திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டாரே, அந்த வழக்கு என்னவாயிற்று ?'' என்ற கேள்வியை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் அஷாக் என்ற வாசகர், கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கான பதில்கள் இந்தக் கட்டுரையில்...
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம், ஒரு அமைப்பினர் மதம் மாற்றம் செய்ததைத் தட்டிக் கேட்டதற்காக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 12 பேரைக் கைது செய்து தேசியப் புலனாய்வு அமைப்பினர் விசாரித்து வருகின்றனர். சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேலதூண்டில் விநாயகம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் ஷ்யாம் சுந்தர், மலர் மன்னன், இளவரசன் என மூன்று மகன்களும் உள்ளனர். இவர் திருபுவனம் கடைவீதியில் `தமிழன் கேட்டரிங்க் சர்வீஸ்' என்கிற பெயரில் சமையல் காண்ட்ராக்ட் மற்றும் அதற்குத் தேவையான பொருள்களை வாடகைக்குக் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம், ஒரு அமைப்பினர் பொதுமக்கள் சிலரிடம் தங்கள் மதத்துக்கு மாற வலியுறுத்தி, மதம் மாற்றம் குறித்து பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதைப் பார்த்த ராமலிங்கம் அவர்களுடன் வாக்குவாதம் செய்து, கோபமாகப் பேசி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார். இதையடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி ராமலிங்கம் மர்ம நபர்களால் கை துண்டிக்கப்பட்ட நிலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் முதலில் முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, அசாருதீன், ரிஸ்வான், சர்புதீன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆனால், முக்கியக் குற்றவாளிகளை காவல்துறையினர் தப்பவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அடுத்து இதில் தொடர்புடையதாகக் கூறி மேலும் மூன்று பேரை கைது செய்தனர்.
இந்தக் கொலையில், திருபுவனம் பகுதியைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சிலருக்குத் தொடர்பிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை விறுவிறுப்பாக நடந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.
இது குறித்து சிலரிடம் பேசினோம்,
``ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினருக்கு வெளியிலிருந்து ஓரளவுக்கு பொருளாதார உதவி கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு அவர் மனைவி குடும்பத்தை நடத்திவருகிறார். கொலைக்குப் பிறகு கும்பகோணம் பகுதி முழுவதும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. திருபுவனத்தில் 6 இடங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு, இந்தப் பகுதிக்கு யார் யார் வருகிறார்கள் என்பதை தீவிரமாக கண்காணித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும் விசாரணை மந்தகதியில் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டதையடுத்து விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியது.

உள்ளூர் காவல்துறையினரிடம் விசாரணை அறிக்கையை பெற்றபின், தேசியப் புலனாய்வு அமைப்பு விசாரணையை தீவிரப்படுத்தியது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். மற்றவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. விசாரணையையும் அடுத்தகட்ட நகர்வையும் தேசிய புலனாய்வு அமைப்பினர் மிகவும் ரகசியமாக நடத்தி வருகின்றனர்.
சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சுமார் 600 சாட்சிகளிடம் இந்தக் கொலை தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளதால் விசாரணை முடிய மூன்று ஆண்டுகள் ஆகலாம் என தெரிகிறது.

இந்த வழக்கு தொடர்பாக இன்னும் 6 நபர்களைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என தேசியப் புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துவருகின்றனர். இதை ஒரு கொலை வழக்காக மட்டுமே பார்க்காமல், மதம் சம்பந்தப்பட்ட விஷயமாகப் பார்க்கப்படுவதால் தீவிரமாகவும், எச்சரிக்கையுடனும் அணுகி விசாரணை நடத்திவருகின்றனர்'' என்றனர்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!