Published:Updated:

பேரணாம்பட்டு: `50 அடியாட்கள்; தினமும் ரூ.4 கோடி பணம்; களைகட்டும் சூதாட்டம்- போலீஸ் விசாரணை!'

கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடரும் பேரணாம்பட்டு சூதாட்ட கிளப் விவகாரத்தில், காவல்துறையின் நடவடிக்கை இந்த முறையாவது கண் துடைப்புக்கு இல்லாமல், கடுமையாக இருக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியைச் சேர்ந்த ஹார்டுவேர் கடை உரிமையாளரான ஞானசேகரன், நேற்று முன்தினம் இரவு பேரணாம்பட்டுப் பகுதியிலிருந்து நண்பர்கள் இரண்டு பேருடன் காரில் வந்துகொண்டிருந்தார். கர்நாடகப் பதிவெண் கொண்ட காரில் பின்தொடர்ந்து வந்த 6 பேர் கும்பல், வாணியம்பாடிக்கு முன்புள்ள வளையாம்பட்டு மேம்பாலம் அருகில் ஞானசேகரன் காரை மடக்கியது. காரிலிருந்து ஆயுதங்களுடன் இறங்கிவந்த கும்பல், ஞானசேகரனை மிரட்டி அவரிடமிருந்த ரூ.11 லட்சம் பணத்தைப் பறித்துக்கொண்டு காரில் ஏறி தப்ப முயன்றது. அதற்குள்ளாக, ஞானசேகரனின் நண்பர்களில் ஒருவர், மர்ம கும்பலின் கார் சாவியைப் பிடுங்கி மேம்பாலத்துக்கு அந்தப் பக்கம் வீசிவிட்டார். நடுரோடு என்பதால், பதறிப்போன கும்பல் பணப் பையுடன் மட்டும் தப்பி ஓடிவிட்டது. தகவலறிந்ததும், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

பணம்
பணம்

மர்ம கும்பல் விட்டுச்சென்ற காரின் பதிவெண்ணும் போலி எனத் தெரியவந்தது. வழக்கறிஞர் மற்றும் ஊடகம் என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்த காருக்குள் காவலர்கள் அணியும் தொப்பியும் இருந்தது. இதையடுத்து, காரைப் பறிமுதல் செய்து தப்பி ஓடிய கும்பலைப் பிடிக்க தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளார் எஸ்.பி சிபிசக்கரவர்த்தி. பணம் பறிகொடுத்த ஞானசேகரனிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தபோது, வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே கௌராப்பேட்டையிலுள்ள வனப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் மாந்தோப்பில், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சூதாட்டம் நடப்பதும், மர்ம கும்பலிடம் பறிகொடுத்த பதினொரு லட்சம் ரூபாயும் சூதாட்டத்தில் வென்றது எனவும் தெரியவந்தது.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமாருக்கும் தகவல் பரிமாறப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட போலீஸாருடன் வேலூர் போலீஸாரும் இணைந்து நடத்திய விசாரணையில், அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, காவல்துறை உயரதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘குடியாத்தம் அருகேயுள்ள பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரரான பிரபாகரன் என்கிற இளையராஜா மற்றும் அவரின் உறவினர் ஆறுமுகம் ஆகிய இருவரும்தான் சூதாட்ட கிளப் நடத்திவருகின்றனர். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலுள்ள நபர்களும், அண்டை மாநிலங்களான ஆந்திர, கர்நாடகாவிலிருந்தும் பலர் சூதாட்டம் ஆட வருகிறார்கள். மாலை 3 மணிக்குத் தொடங்கும் சூதாட்டம் 6.30 மணிக்கெல்லாம் முடிந்துவிடுகிறது.

பணம் பறித்த கும்பலின் காரில் சோதனை செய்யும் எஸ்.பி சிபிசக்கரவர்த்தி
பணம் பறித்த கும்பலின் காரில் சோதனை செய்யும் எஸ்.பி சிபிசக்கரவர்த்தி

நாளொன்றுக்கு நான்கு கோடி ரூபாய் வரை பணம் புரளுகிறது. பெரிய அளவில் சூதாட்டம் நடைபெறுவதால், இங்கு வரும் நபர்கள் உரிமம் பெறாத கைத்துப்பாக்கிகளையும் வைத்திருக்கிறார்கள். சூதாட்டம் நடத்தும் இளையராஜா கோழிப்பண்ணையும் நடத்துகிறார். சூதாட வரும் நபர்கள் தங்களது வாகனங்களை கோழிப்பண்ணையில்தான் பாதுகாப்பாக நிறுத்திவிட்டுச் செல்கிறார்கள். சூதாட்டம் நடத்தும் இளையராஜா ஐம்பத்துக்கும் மேற்பட்ட அடியாட்களையும் வைத்திருக்கிறார். பணத்தையிழந்த ஞானசேகரனும், அன்றிரவு லட்சக்கணக்கான ரூபாயுடன் சூதாட்ட கிளப்புக்கு வந்து சூதாடியிருக்கிறார். ரூ.25 லட்சம் வென்றவுடன் அந்தப் பணத்தை பைகளில் போட்டுக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனை அங்கிருந்து கண்காணித்த ஏதோவொரு கும்பல்தான் பின்தொடர்ந்து வந்து கைவரிசை காட்டியிருக்கிறது. ரூ.11 லட்சம் பறிக்கப்பட்டிருந்தாலும், மீதி ரூ.14 லட்சத்தை விடாமல் பதுக்கிக் கொண்டார் ஞானசேகரன். அதுமட்டுமல்ல... சூதாட்டம் நடத்தும் நபர்களே பைனான்ஸும் விடுகிறார்கள். இந்த வாரத்தில் மட்டும் சூதாட வந்து பணத்தை இழந்த நபர்கள், நான்கு கார்களை அடகு வைத்துள்ளனர். ஒருத்தர் ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் விளையாட வந்து, பணத்தை இழந்துள்ளார். அங்கேயே, மேலும் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி சூதாட்டத்தில் போடுகிறார். அதிலும், 60 ஆயிரம் ரூபாயை இழக்க மீதி நாற்பதாயிரத்துடன் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.

சூதாட்டம்
சூதாட்டம்

இன்னொரு நபர் மூன்று லட்சம் ரூபாய்க்கு தனது காரை அடமானம் போட்டிருக்கிறார். மூன்று நாளைக்குப் பத்து பைசா வட்டி என அவரிடம் கடன் தொகையை வசூலிக்கிறது, பைனான்ஸ் விடும் கும்பல். இதனையும் கண்டுபிடித்து, இரண்டு கார்களை திருப்பத்தூர் மாவட்ட போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். பைனான்ஸியர் ஒருவரும் சிக்கியுள்ளார். சூதாட்ட கிளப் நடத்தும் கும்பலையும் கூண்டோடுப் பிடிக்க வேலூர் மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டிருக்கிறார்’’ என்றனர்.

இந்த நிலையில், சூதாட்ட கிளப் செயல்படுவதை கண்டுகொள்ளாமல், மாமூல் வாங்கிய புகாரில், பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு செல்வராஜ் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி வேலூர் எஸ்.பி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பேரணாம்பட்டு சூதாட்ட கிளப் விவகாரத்தில், காவல்துறையின் நடவடிக்கை இந்த முறையாவது கண் துடைப்புக்கு இல்லாமல், கடுமையாக இருக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு