Published:Updated:

திருத்தணி:`பெண் ஃபைனான்ஸியர் கொலை; கொள்ளை நகையில் பைக்!' - ஆண் நண்பருடன் சிக்கிய இளம்பெண்

கொலை வழக்கில் கைதான சிவகாமி
கொலை வழக்கில் கைதான சிவகாமி

திருத்தணியில் கடன் வாங்கிய பணத்தை திருப்பிக் கேட்டதால் ஆண் நண்பருடன் சேர்ந்து, பெண் ஃபைனான்ஸியரை இளம்பெண் கொலை செய்தார். பின்னர், பெண் ஃபைனான்ஸியர் அணிந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்து அதில் டூவிலர் வாங்கி ஊர் சுற்றியிருக்கிறார்.

திருத்தணியை அடுத்த பொன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் மனைவி நவநீதியம்மாள் (55). இவர், பொன்பாடி மேட்டு காலனியை சேர்ந்த சிவகாமி (36) என்பவருக்குக் கடனாகப் பணம் கொடுத்திருந்தார். கடந்த 28-ம் தேதி சிவகாமியிடம் பணத்தை வாங்கி வருவதாக வெளியில் சென்ற நவநீதியம்மாள், பின்னர் வீடு திரும்பவில்லை. அதனால் நவநீதியம்மாளை அவரின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து நவநீதியம்மாளைக் கண்டுபிடித்துத் தரும்படி திருத்தணி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. போலீஸார் அவரைத் தேடிவந்தனர்.

சிவகாமி
சிவகாமி

இந்தநிலையில் கடந்த 29-ம் தேதி பொன்பாடி மேட்டுக் காலனி அருகே தேக்குத் தோப்பில் நவநீதியம்மாள் மர்மமான முறையில் வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்தார். இது குறித்து திருத்தணி போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். பின்னர் நவநீதியம்மாளின் சடலத்தை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் நவநீதியம்மாள் அணிந்திருந்த கம்மல், தாலிச்சரடு மற்றும் தங்க செயின், மூக்குத்தி உட்பட 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. அதனால் நகைக்காக நவநீதியம்மாள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சிவகாமியிடம் கடன் பணத்தை வாங்கி வருவதாகக் கூறிவிட்டு நவநீதியம்மாள் சென்ற தகவல் கிடைத்ததும், சிவகாமியைத் தேடி அவரின் வீட்டுக்குச் சென்றோம். அங்கு அவரின் வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரைப் பற்றி விசாரித்தபோது, திருப்பதியில் அவர் தங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக திருப்பதி போலீஸார் மூலம் சிவகாமி குறித்து விசாரித்தோம். அப்போது அவர், ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடன் தங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. சமீபத்தில் சாராய ஊறல் பதுக்கிவைத்திருந்ததாக, சிவகாமியை மதுவிலக்கு போலீஸார் கைது செய்துள்ளனர். ஜாமீனில் வெளியில் வந்த சிவகாமியிடம் நவநீதியம்மாள் மரணம் குறித்து விசாரித்தோம்.

சுரேஷ்
சுரேஷ்
சென்னை:`திறக்கப்படாத கதவுகள்; குப்பையில் நகைகள், பணம்!' - பிளாட்பார மூதாட்டிகளின் சோகம்

அப்போது அவர், நவநீதியம்மாளை சுரேஷுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிவகாமி, சுரேஷ் ஆகியோரைக் கைது செய்திருக்கிறோம். நவநீதியம்மாளிடமிருந்து கொள்ளையடித்த நகைகளை திருப்பதியில் அடகுவைத்துள்ளனர். அந்த நகையில் புதிதாக டூவிலர் ஒன்றை வாங்கியிருந்தனர். மீதிப் பணத்தில் சந்தோஷமாக ஊரடங்கிலும் ஊர்சுற்றி வந்தது தெரியவந்தது. சிவகாமி, சுரேஷ் அளித்த தகவலின்படி நகைகளை மீட்டுள்ளோம். புதிதாக வாங்கிய டூவீலரையும் பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

சிவகாமி, போலீஸாரிடம், `சம்பவத்தன்று நவநீதியம்மாளுக்கு போன் செய்து, பணம் தருவதாகக் கூறி தேக்கு தோப்புக்கு வரும்படி தெரிவித்தேன். என் பேச்சை நம்பிய நவநீதியம்மாள் தனியாக அங்கு வந்தார். `நவநீதியம்மாள், உயிரோடு இருந்தால் பணம் கேட்டு தொல்லை கொடுப்பார். அதனால், அவரைக் கொலை செய்துவிட்டு நகைகளைக் கொள்ளையடித்தால் சந்தோஷமாக வாழலாம்’ என நானும் சுரேஷும் முடிவு செய்தோம். அதன்படி நவநீதியம்மாளின் கழுத்தில் துண்டைப்போட்டு நெரித்து, கொலை செய்தோம்' என்று கூறியிருக்கிறார்.

திருத்தணியில், கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட பெண் ஃபைனான்ஸியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு