Published:Updated:

கர்ப்பமான 17 வயதுச் சிறுமிக்கு திருமணம்? - போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதான டிரைவர்

சிறுமி வழக்கை விசாரித்த திருத்தணி காவல் நிலையம்
சிறுமி வழக்கை விசாரித்த திருத்தணி காவல் நிலையம்

காதலனால் ஏமாற்றப்பட்ட 17 வயதுச் சிறுமி, திருத்தணி காவல் நிலையத்தில் புகாரளித்தார். செல்வாக்கு காரணமாகத் திருமண பேச்சுவார்த்தை நடந்தது குறித்து மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு தகவல் சென்றதும், திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் காதலன் கைது செய்யப்பட்டார்.

17 வயதுச் சிறுமி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். விவசாயின் மூத்த மகளுக்கு 17 வயதாகுகிறது. இவர் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் வெங்கடேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகியதால் 17 வயதுச் சிறுமி 3 மாத கர்ப்பமாகியுள்ளார். இந்தத் தகவலை வெங்கடேசனிடம் சிறுமி கூறியுள்ளார்.

Representational Image
Representational Image

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், கர்ப்பத்தைக் கலைக்கும்படி கூறியுள்ளார். இந்தத் தகவல் சிறுமியின் வீட்டினருக்குத் தெரிந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வெங்கடேசன் குடும்பத்தினரிடம் விவரத்தைக் கூறி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். சிறுமியைத் திருமணம் செய்ய வெங்கடேசனின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதனால் சிறுமியின் வீட்டினர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார், வெங்கடேசனிடமும் சிறுமியிடமும் விசாரணை நடத்தினர். விசாரணை என்ற பெயரில் சிறுமியின் குடும்பத்தினரிடம் போலீஸார் சிலர் திருமணப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. `வெங்கடேசன் சிறைக்குச் சென்றால், உங்கள் மகளின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். அதனால் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத் திருமணம் செய்து கொடுத்துவிடுங்கள்' என்று போலீஸார் அட்வைஸ் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

திருத்தணி காவல் நிலையம்
திருத்தணி காவல் நிலையம்

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி-க்கு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் உடனடியாக உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிறுமியின் புகார் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்துவிட்டு, இன்றுக்குள் ரிப்போர்ட்டை தெரிவிக்கும்படி திருத்தணி போலீஸாருக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வெங்கடேசனை கைது செய்த போலீஸார், அவர் மீது போக்ஸா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் வெங்கடேசனை ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது வெங்கடேசனை படம், வீடியோ எடுக்க பத்திரிகையாளர்கள் முயன்றபோது திருத்தணி டி.எஸ்.பி சேகர் தடுத்தார். அதனால் வெங்கடேசனை யாரும் படம் எடுக்க முடியவில்லை. வெங்கடேசனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட போலீஸார் மீது திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருமணம்
திருமணம்
மாதிரிப் படம்
பாலியல் வழக்கு... போக்ஸோ சட்டம்! -வேலூர் சிறையில் தற்கொலைக்கு முயன்ற கைதி

திருத்தணி காவல் நிலையத்தில் நடந்த விசாரணை தகவல் எப்படி மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்குச் சென்றது எனத் திருத்தணி போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுகுறித்து ரகசிய விசாரணையும் நடந்துவருகிறது.

இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன் திருத்தணியில் சிறுமி ஒருவருக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு