Published:Updated:

காதலிக்கு காட்டுக்குள் பிரசவம் பார்த்த காதலன்.. உயிருக்குப்போராடும் கல்லூரி மாணவி!

காதலிக்கு  பிரசவம் பார்த்த காதலன்
காதலிக்கு பிரசவம் பார்த்த காதலன்

நீ என்னை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், உன் குழந்தையை என் வயிற்றில் சுமக்கிறேன். இப்போதே எனக்கு ஒரு பதில் சொல் எனக்கூறிய காதலிக்கு காட்டுப்பகுதியில் காதலன் பிரசவம் பார்த்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண், பொன்னேரி அரசுக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தர் என்பவரும் காதலித்தனர். சௌந்தர், கேஸ் சிலின்டர்களை விநியோகம் செய்துவருகிறார். மாணவியும் சௌந்தரும் நெருங்கிப் பழகினர். அதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார். இந்தச் சூழலில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

காதலன் சௌந்தர்
காதலன் சௌந்தர்

திருமணம் செய்துகொள்ளாமல் கருவை வயிற்றில் சுமந்த மாணவி, கல்லூரிக்குச் சென்றுவந்தார். தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். திடீரென மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் சௌந்தருக்கு செல்போனில் தகவலைத் தெரிவித்தார். உடனடியாக மாணவியை வீட்டிலிருந்து வெளியில் வரும்படி சௌந்தர் கூறினார். பின்னர் இருவரும் ஊருக்கு வெளியில் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்குச் சென்றனர். அப்போது மாணவி, நமக்கு இன்னும் திருமணமாகவில்லை. அதற்குள் நான் குழந்தையை பெற்றெடுக்கப்போகிறேன். எனக்கு இப்போது ஒரு பதிலைச் சொல் என்று மாணவி கேட்டுள்ளார். அதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

மாணவிக்கு வயிற்று வலி அதிகமானதும் காட்டுப்பகுதியிலேயே அவர் அலறினார். அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சௌந்தர் திகைத்தார். உடனே கையிலிருந்த செல்போனில் யூ டியூப்பில் பிரசவம் பார்ப்பது எப்படி என்ற வீடியோவை பார்த்துள்ளார் சௌந்தர். அந்த வீடியோவில் வருவதைப்போல சௌந்தரும் செய்யத் தொடங்கினார். காட்டில் உதவிக்கு யாரும் இல்லாமல் இருவரும் மட்டுமே இருந்த நேரத்தில் மாணவிக்கு சௌந்தர், துணிச்சலாக பிரசவம் பார்க்கத் தொடங்கினார். அப்போது, குழந்தையின் கை மட்டும் வெளியில் வந்துள்ளது. அதைப்பிடித்து சௌந்தர் இழுத்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆண் குழந்தை
ஆண் குழந்தை

துரதிருஷ்டவசமாக குழந்தையின் கை மட்டும் சௌந்தரின் கையில் வந்தது. ஆனால், குழந்தை மாணவியின் வயிற்றிலிருந்து வெளியில் வரவில்லை. அதே நேரத்தில் மாணவிக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் விபரீதத்தை உணர்ந்த சௌந்தர், மாணவியின் அம்மாவுக்கு போன் மூலம் தகவலைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவியின் அம்மா மற்றும் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காட்டுப்பகுதிக்கு வந்தனர். அதோடு 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர்.

காட்டுப்பகுதியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். மாணவியைப் பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினர். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் மாணவியின் வயிற்றிலிருந்து ஆண் குழந்தை வெளியில் எடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் குழந்தை இறந்திருந்தது. தற்போது மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

போலீஸ்
போலீஸ்

இதுகுறித்து பாதிரிவேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சௌந்தரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர் கூறிய தகவலைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். தற்போது, சௌந்தரைக் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``காதலிக்கு யூடியூப் மூலம் பிரசவம் பார்த்த சம்பவத்தில் காதலன் சௌந்தர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து விசாரித்துவருகிறோம். சௌந்தர் காதலித்த பெண், அவருடைய உறவினர். அந்தப் பெண், கல்லூரியில் படித்துவருகிறார். அவருக்கு அப்பா இல்லை. அம்மா, ஒரு தம்பி, தங்கை ஆகியோர் உள்ளனர். மாணவி கர்ப்பம் தொடர்பாக அவரின் அம்மாவிடம் விசாரித்துவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு