Published:Updated:

திருவள்ளூர்: ஆந்திரா டு சென்னை! - கஞ்சா கடத்தலில் கொல்லப்பட்ட இளைஞர்?

வெங்கடேஷின் உடல்
வெங்கடேஷின் உடல்

சென்னையில் கஞ்சா தேவை அதிகரித்துள்ளதால், ஆந்திராவிலிருந்து சென்னைக்கு அதிகளவில் கஞ்சா கடத்தப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகாவுக்குட்பட்ட திருவாலங்காடு ஒன்றியத்தில் மணவூர் செல்லும் சாலையில் கன்னி கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகில் உள்ள ஏரியில் இளைஞரின் சடலம் மிதப்பதை ஆடு, மாடு மேய்ப்பவர்கள் பார்த்தனர். பின்னர் அவர்கள், திருவாலங்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருவாலங்காடு கோயில்
திருவாலங்காடு கோயில்

திருவாலங்காடு போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்தவர் வெங்கடேஷ் (30) என்றும் பழையனூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. வெங்கடேஷ், கட்டட வேலைகளைச் செய்துவந்தார். அவரின் சடலத்தை போலீஸார் பார்த்தபோது பின்தலையில் ஐந்துக்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்கள் இருந்தன. அதனால், வெங்கடேஷை கொலை செய்து ஏரிக்குள் வீசி சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். வெங்கடேஷ் எப்படி இறந்தார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கும்பகோணம்: `100-க்கு வந்த அழைப்பு!’ - எண்ணெய் வியாபாரி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ``வெங்கடேஷ் கொலை செய்யப்பட்ட பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன. அவ்வழியாகச் செல்பவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அவர்களுக்கும் வெங்கடேஷுக்கும் தகராறு ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. வெங்கடேஷ் கொலைக்கு காரணமானவர்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோந்துப் பணியையும் போலீஸார் அதிகரிக்க வேண்டும்" என்றனர்.

சடலத்தை மீட்கும் போலீஸ்
சடலத்தை மீட்கும் போலீஸ்
சென்னை: `பாதாள சாக்கடை தகராறு; மகன் கண்முன் தந்தை கொலை’ - கணவனைக் காப்பாற்றிய மனைவி

திருவலங்காடு போலீஸார் கூறுகையில், ``இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில்தான் கொலைக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸார் கூறுகையில், `` ஊரடங்கு என்பதால் சென்னையில் கஞ்சா தேவை அதிகரித்துள்ளது. அதனால், ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல் படுஜோராக நடந்துவருகிறது. போக்குவரத்து வசதியில்லாததால் பைக்கில்தான் கஞ்சா கடத்தி வரப்படுகிறது.

இதுகுறித்து உளவுத்துறை போலீஸார் ரகசிய அறிக்கை கொடுத்தும், காவல்துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகள் வாகனச் சோதனையில் சிக்கும் கடத்தல் கும்பல்களிடம் கையூட்டை பெற்றுக்கொண்டு தப்பிக்க விட்டுவிடுகின்றனர். திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது புகார்கள் குவிந்தாலும், மூத்த அமைச்சருக்கு நெருக்கமானவர் என்று கூறி அவர் நடவடிக்கையிலிருந்து தப்பித்துவருகிறார்.

திருவாலங்காடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தல் சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வருவதாக மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கும் தகவல் வந்துள்ளது. தற்போது வெங்கடேஷ் மரணத்தில்கூட உண்மையான காரணத்தை மறைக்க முயற்சிகள் நடக்கின்றன" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு