Published:Updated:

திருவாரூர்: அரசியல் பிரமுகர் கொலை வழக்கு; 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

கொலை
கொலை

`இந்த மாவட்டத்தில் யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே அரசியல் பிரமுகர் கொலை வழக்கில் ஏழு பேர்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருவாரூர் ஆட்சியர் காய்த்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். ஒரே சமயத்தில் ஏழு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, இந்தப் பகுதியில் பரபரபாகப் பேசப்படுகிறது.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டை செல்லும் வழியிலுள்ள ஆரியூரில் வசித்துவந்தவர் ரஜினி பாண்டியன். இவர், ஜான் பாண்டியன் தலைமையில் இயங்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளராக இருந்து, பிறகு இதே பகுதியைச் சேர்ந்த பாலை பட்டாபிராம் என்பவர் புதிதாகத் தொடங்கிய, வளரும் தமிழகம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு மாவட்டச் செயலாளராக பதவி வகித்துவந்தார். கடந்த ஜூலை 9-ம் தேதி, தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ரஜினி பாண்டியனை, வடசங்கேந்தி என்னுமிடத்தில் ஏழு பேர் கொண்ட மர்மக் கும்பல் வழிமறித்து, பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு, தப்பியோடியது. உடல் முழுவதும் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த ரஜினி பாண்டியனை அந்தப் பகுதி மக்கள், 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி ரஜினி பாண்டியன் உயிரிழந்தார். ரஜினி பாண்டியனுக்கும் இதே பகுதியைச் சேர்ந்த மகாதேவன், ராஜேஷ் உள்ளிட்டவர்களுக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாகவும், அதன் எதிரொலியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகித்தினர்.

ரஜினி பாண்டியன் படுகொலைக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தி, இவரின் ஆதரவாளர்கள் திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளைப் பிடிக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நான்கு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். தீவிர விசாரணையும், தேடுதல் வேட்டையும் நடைபெற்ற நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்தக் கொலையில் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்ட எடையூரைச் சேர்ந்த ராஜேஷ், மகாதேவன், பிரதீப், சம்பத், கார்த்தி, ஆனந்த், சிதம்பரம் ஆகிய ஏழு பேரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர் போலீஸார்.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்

அதைத் தொடர்ந்து முத்துப்பேட்டை மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, ரஜினி பாண்டியன் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ஏழு பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இந்த ஏழு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மகாதேவன், ராஜேஷ், பொட்டுகார்த்தி உள்ளிட்டவர்கள் நேற்று மாலை திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, சிறப்பாகப் பணிபுரிந்த முத்துப்பேட்டை துணைக்காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை மற்றும் எடையூர் காவல்துறையினருக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்த மாவட்டத்தில் யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு