Published:Updated:

திருவாரூர்: மாயமான குழந்தையின் செயின்; வீண் பழி! - விபரீத முடிவெடுத்த திமுக பிரமுகரின் மகள்

தற்கொலை
தற்கொலை ( Representational image )

எந்தத் தவறு செய்யாத தன் மகளின்மீது வீண் பழி சுமத்தி, தற்கொலைக்குத் தூண்டியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட்ட வேண்டும் என வலியுறுத்தி, ஒரு ஆடியோ ஒன்றை செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே தி.மு.க பிரமுகரின் மகள்மீது திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதால் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் நேர்மையாக விசாரணை மேற்கொண்டு, தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அந்தப் பெண்ணின் தந்தை உருக்கமான வேண்டுகோள் விடுத்து ஆடியோ வெளியிட்டிருக்கிறார்.

தற்கொலை
தற்கொலை

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள கள்ளடிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் திமுக இளைஞரணி கிளைச் செயலாளராக பொறுப்பு வகித்துவருகிறார். இவரின் மகள் சாதனா. ப்ளஸ் டூ படித்த இவர், சுய உதவிக்குழுக்களை ஒருங்கிணைக்கக்கூடிய தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்திருக்கிறார். இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, சுய உதவிக்குழு பணி தொடர்பாக, தீபமங்கலம் கிராமத்துக்கு சாதனா சென்றிருக்கிறார்.

அங்கு தனது உறவினர் இளையபாரதி என்பவரின் 2 வயது குழந்தையுடன் சாதனா சிறிது நேரம் விளையாடிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து, தனது குழந்தை அணிந்திருந்த 4 கிராம் தங்க செயின் காணாமல் போனதாகவும், அதை சாதனாதான் எடுத்து சென்றிருக்கக்கூடும் எனவும் இளையபாரதி சந்தேகப்பட்டிருக்கிறார். இது குறித்து சாதனாவிடம் இவரும் இவரின் உறவினர்களும் விசாரித்துள்ளனர். ஆனால், அந்த செயினை தான் எடுக்கவில்லை எனவும், குழந்தை அணிந்திருந்த நகை காணாமல்போனதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் சாதனா மறுத்திருக்கிறார்.

ராணிப்பேட்டை: `இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை!’ - திருமணம் முடிவான நிலையில் வங்கி அதிகாரி தற்கொலை

ஆனால் இதை ஏற்காமல், கிராம மக்கள் முன்னிலையில், சாதனாவைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அவரைச் சோதனை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த சாதனா, மன வேதனை அடைந்து விபரீத முடிவுக்குச் சென்றிருக்கிறார். தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவோடு, மணக்கால் அய்யம்பேட்டை என்ற பகுதிக்குச் சென்று, எலி மருந்தை தின்றிருக்கிறார். சாதனா இருக்கும் இடத்தை அறிந்து அங்கு வந்த தந்தை செந்தில்குமார், அவரைச் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே சாதனா வாந்தியெடுத்ததால், உடனடியாக அவர் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தற்கொலை (Representational Image)
தற்கொலை (Representational Image)

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்றுவந்த சாதனா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சாதனாவின் தந்தை செந்தில்குமார், குடவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சாதனாவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக, அவரின் உறவினர்களான இளையபாரதி, அய்யப்பன் ஆகிய இருவரைக் கைதுசெய்து காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள்.

தனது மகளின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும், எந்தத் தவறும் செய்யாத தன் மகளின் மீது வீண் பழி சுமத்தி, தற்கொலைக்குத் தூண்டியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட்ட வேண்டும் என வலியுறுத்தி, ஆடியோ ஒன்றை செந்தில்குமார் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், ``என் மகள் சாதனா, அந்தக் குழந்தையை ஆசையாகக் கொஞ்சி முத்தமிட்டு, அந்தக் குழந்தையை அதன் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்திருக்கிறார். அந்தக் குழந்தை அணிந்திருந்த அரை பவுன் செயின் காணாமல் போனதற்கும் என் மகளுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் என் மகளைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள். என் மகளின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்’’ என வலியுறுத்தியிருக்கிறார்.

கைது
கைது
Representational Image

இது குறித்து குடவாசல் காவல் நிலைய ஆய்வாளர் ரேகா ராணியிடம் நாம் கேட்டபோது, ``குழந்தை அணிந்திருந்த நகை காணாமல் போயிடுச்சுனு தெரிஞ்சதுமே, அவங்க போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கணும். ஆனால் அந்தக் குழந்தையோட குடும்பத்தினர், சாதானாகிட்ட விசாரிச்சதோட, சோதனை பண்ணியும் பார்த்திருக்காங்க. அந்த நகை சாதானாகிட்ட இல்லை. அந்த நகை முன்னாடியே வேற எங்கேயும் கீழே விழுந்துடுச்சா இல்லை வேற யாராவது எடுத்துட்டாங்களான்னு தெரியலை. சாதனாகிட்ட விசாரிச்ச பிறகும் சும்மாவிடாமல் அந்தப் பொண்ணோட வீட்டுக்கும் போயி இது சம்பந்தமா ஏதோ மிரட்டிட்டு வந்திக்காங்க. அது ரொம்ப தவறான செயல். இதனால்தான் அந்தப் பொண்ணு அவமானம் தாங்காம தற்கொலை பண்ணியிருக்கு. இதுக்கு காரணமானவங்கள்ல ரெண்டு பேரை கைது பண்ணி ரிமாண்ட் பண்ணியிருக்கோம்" என்றார்.

கரூர்: 'வேண்டியபடி திமுக ஆட்சி; வேண்டுதலை நிறைவேற்றுகிறேன்!’ - கோயிலில் தற்கொலை செய்துகொண்ட முதியவர்
அடுத்த கட்டுரைக்கு