Published:Updated:

`அவர் வேறமாதிரி இருந்தார்; ரோடு போட்டுத் தர்றேன்னு சொன்னார்!’ - புது கெட்-அப்பில் திருவாரூர் முருகன்

முருகன், மொத்த கெட்டப்பை மாற்றி, யூத்ஃபுல்லாக சொகுசு கார்களில் ஊர் சுற்றுகிறார் என பொதுமக்கள் சொல்ல, போலீஸாருக்கே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

முருகன் தங்கியிருந்த வீடு
முருகன் தங்கியிருந்த வீடு

திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடை கொள்ளைச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளிகளான திருவாரூர் முருகன் மற்றும் அவரது மைத்துனர் சுரேஷ் உள்ளிட்டோரை திருச்சி மாநகர போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர்.

திருச்சியில் கொள்ளையடிக்கப் பட்ட லலிதா ஜுவல்லரி
திருச்சியில் கொள்ளையடிக்கப் பட்ட லலிதா ஜுவல்லரி

இந்நிலையில், தகவலறிந்த சுரேஷ் தனது மனைவியுடன் தலைமறைவானார். இதேபோல், முருகனும் அவரது மனைவி மஞ்சுளா மற்றும் குழந்தைகளுடன் தலைமறைவானார். தப்பியோடிய சுரேஷ்,பெங்களூருவில் இருப்பதாகத் தகவல் வரவே, அங்கும் போலீஸார் சென்றனர். சுரேஷின் தாய் கனகவல்லி மற்றும் தந்தை குணசேகரன், முருகனின் அண்ணன் மகன் முரளி உள்ளிட்ட குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், கொள்ளையடித்த 16 கிலோ தங்கத்தை உருக்கி விற்க உதவிய, முருகனுக்கு மிக நெருக்கமான, நாகப்பட்டினம் காளிதாஸ் உள்ளிட்ட நான்கு பொற்கொல்லர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், தனிப்படை போலீஸார் பெங்களூருவில் சுரேஷின் மனைவியை நெருங்கிவிட்டதாகவும், அவரையும் கைதுசெய்துவிடுவார்கள் எனச் சொல்லப்பட்டு வந்தநிலையில்தான், நெருக்கடிகளுக்குப் பணிந்து, நேற்று காலை சுரேஷ் திருவண்ணாமலையை அடுத்த செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த சுரேஷ், “நடந்த கொள்ளைக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. போலீஸார் வேண்டுமென்றே என்னைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். என்மீது சில கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதையே காரணம் காட்டி இந்த வழக்கிலும் என்னைத் தொடர்புபடுத்தப் பார்க்கிறார்கள். விசாரணை என்கிற பெயரில் போலீஸார், தொடர்ச்சியாக எனது குடும்பத்தையும் நண்பர்களையும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறார்கள்.

முருகன், மணிகண்டன், சுரேஷ்
முருகன், மணிகண்டன், சுரேஷ்

எனது அம்மா கனகவல்லி மற்றும் அப்பா ஆகியோரைக் கைது செய்துள்ளனர். மேலும், என்னைக் கண்ட இடத்தில் என்கவுன்டரில் போட்டுத்தள்ள இருப்பதாக போலீஸார் மிரட்டி வருகிறார்கள். நான் இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை” என்றார். அதையடுத்து, சுரேஷை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கதறிய சுரேஷ்!

சிறைக்குக் கொண்டுசெல்லும் முன்பு, தவறு செய்தது நாங்கள்தான் எனது குடும்பத்தாரை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என சுரேஷ் கதறியதாகக் கூறப்படுகிறது. மேலும் சுரேஷுக்கு போலீஸார் பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்துதான் நீதிமன்றத்தில் சரணடைய வைத்ததாகவும் கூறுகிறார்கள். ஆனால் வேறு சிலரோ, “ஆரம்பத்திலேயே சுரேஷை போலீஸார் தப்பிக்க விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். திருவாரூரில் தப்பவிட்ட போலீஸார், தற்போதும் கைதுசெய்யும் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டு, நீதிமன்றத்தில் சரணடைய விட்டுவிட்டார்கள்.

சுரேஷ்
சுரேஷ்

போலீஸார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில் சுரேஷ், எவ்வித பதற்றமும் இல்லாமல், ஒரு அரசியல் கட்சிப் பிரமுகரின் காரில், தொப்பி மற்றும் ஜீன்ஸ் பேன்ட் சகிதமாக நீதிமன்றத்தில் சரணடைந்தது எப்படி? சுரேஷ், செங்கம் நீதிமன்றத்தில் ஆஜராவது குறித்து தகவலறிந்த ஊடகத்தினரே காத்திருந்தபோதும், போலீஸ் ஏன் வரவில்லை. இந்த வாய்ப்பை ஏன் போலீஸார் தவறவிட்டார்கள்? இதுபோன்ற வாய்ப்புகளை முன்னதாகவே கணிக்கவேண்டிய உளவுத்துறை அதிகாரிகள், கோட்டைவிட்டது எப்படி” என்றார்கள்.

முருகனின் புதிய கெட்-அப்

இப்படி சுரேஷ் குடும்பத்தாருக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் ஒரு புறம் இருக்க, முருகன் மட்டும் அவரது குடும்பத்தாருடன் சொகுசு கார்களில் ஜாலியாக ஊர் சுற்றுகிறாராம். நகைக்கடை கொள்ளைக்கு முன்னும் பின்னும் திருவாரூர் முருகன், திருச்சி திருவெறும்பூர் பகுதிகளில் தங்கியிருந்தது போலீஸாருக்குத் தெரியவந்துள்ளது.

முருகன் தங்கியிருந்த வீடு
முருகன் தங்கியிருந்த வீடு

போலீஸாரின் விசாரணையில், சென்னை பூஞ்சேரி கிராமத்திலி ருந்து வந்திருப்பதாகக் கூறி, திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர், நருங்குழி நகர்ப் பகுதியில் வசிக்கும் ஷேக் அப்துல் கபூர் என்பவருக்குச் சொந்தமான வீட்டை சுமார் 60 ஆயிரம் முன்பணம் கொடுத்து, மாத வாடகை 6 ஆயிரம் பேசி முருகன் தங்கியுள்ளார். அவருடன் அவரது மனைவி மஞ்சுளா மற்றும் மகன், மகள் ஆகியோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும் பகலில் வெளியே வராத முருகன், அவர் வைத்திருக்கும் டவேரா மற்றும் ஷிஃப்ட் கார்களில் இரவில் உலா வருவாராம்.

அள்ளிவீசிய வாக்குறுதிகள்!

வீட்டுக்குக் குடிவந்த இரண்டு மாதத்தில், வீட்டில் சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்ட முருகன், வீட்டுக்கு வந்த வேலையாட்கள் மற்றும் நண்பர்களைப் பலமாகக் கவனித்துள்ளார். மேலும், அப்பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், முருகன் தங்கியிருந்த வீட்டுப் பக்கம் உள்ள தெருக்கள், சேறும் சகதியுமாக மாறிக் கிடந்துள்ளது. அதைப் பார்த்த முருகன், அப்பகுதி மக்களை அழைத்து, சாலைகள் இவ்வளவு மோசமாக உள்ளது. அரசாங்கத்தை நம்பி பலனில்லை. ஆளுக்கு 500 ரூபாய் கொடுங்க. நான் எனது சொந்தச் செலவில் சாலை போட்டுத் தருகிறேன்” என்றாராம்.

வாக்குறுதி தந்த முருகன்.. புதுகெட் அப்
வாக்குறுதி தந்த முருகன்.. புதுகெட் அப்

கொள்ளைச் சம்பவத்துக்குப் பிறகு, போலீஸார் கடுமையாகத் தேடிக்கொண்டிருக்க, முருகன் எவ்வித பதற்றமும் இல்லாமல் திருச்சி திருவெறும்பூர் பகுதியில் தங்கியிருந்ததுடன், ஆயுத பூஜைக்கு இரு தினங்களுக்கு முன், அதிகாலை வீட்டிலிருந்த அனைத்து சாமான்களையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், போலீஸார் கையில் வைத்திருந்த புகைப்படங்களைக் காட்டி, இவர்தானே முருகன் என விசாரித்தனர். ஆனால் அவர்களோ, “இவர் முருகன் இல்லை, அவர் நல்ல ஹெல்தியா, கெட்-அப்பே வேறுமாதிரி இருந்தார் என அப்பகுதி மக்கள் சொன்னார்கள். அப்போது நாம், கடந்த சில தினங்களுக்கு முன்பு விகடன் இணையதளத்தில் வெளியிட்ட, திருவாரூர் முருகன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் புகைப்படத்தைக் காட்டி கேட்டபோது, ஆமாம் சார்... இவர்தான் முருகன், அந்தம்மா மஞ்சுளா” எனக் கூறினர்.

போலீஸாருக்கு அப்போதுதான் தெரிந்ததாம், தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ள முருகன், மருத்துவ சிகிச்சை மூலமும் பல் மற்றும் முகம் உள்ளிட்டவற்றைச் சரிசெய்து புதிய கெட்- அப்புடன் வலம்வருவது. போலீஸார் கையில் வைத்திருக்கும் புகைப்படத்திலுள்ள உடல் நலம் குன்றிய முருகனின் தோற்றத்திற்கும், தற்போது மிக உற்சாகமாகத் துடிப்போடு காணப்படும் முருகனுக்கும் நிறைய வித்தியாசங்கள் எனத் தெரியவந்தது.

முருகன் தங்கியிருந்த வீட்டுக்கு போலீஸார் சீல் வைத்துள்ளனர். போலீஸார், திருவாரூர் முருகனை ஒரு பக்கம் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்க, மறுபுறம் எவ்வித நெருக்கடியும் இல்லாமல், முருகன் தன் குடும்பத்தாரோடு ஜாலியாக ஊர் சுற்றிவருகிறார் என்பது தெரியவந்துள்ளது. எப்படியாவது முருகனைக் கைது செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் போலீஸார் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார்கள்.