Published:Updated:

`நகைகளைப் புதைக்கும் ஸ்டைல்; ட்ரம் நிறைய பணம்!' -திருவாரூர் முருகன் மனைவி சொல்லும் சீக்ரெட்

`` கொள்ளையடித்த நகைகளைப் பூமிக்கடியில் புதைத்து வைப்பாரே தவிர, யாரிடமும் கொடுத்து வைக்கமாட்டார். நகைகளை புதைத்து வைப்பது அவரின் ஸ்டைல்" என்கிறார் திருவாரூர் முருகனின் மனைவி மஞ்சுளா.

முருகனுடன் மஞ்சுளா
முருகனுடன் மஞ்சுளா

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த மாதம் 2-ம் தேதி நடந்த கொள்ளை தமிழகத்தையே அதிரவைத்தது.

இந்தக் கொள்ளையில் தொடர்புடைய திருவாரூர் முருகன், அவரின் மைத்துனர் சுரேஷ் மற்றும் கணேசன் உள்ளிட்ட குற்றவாளிகளை போலீஸார் தேடிவந்தனர். போலீஸாரின் நெருக்கடிகளுக்குப் பயந்த திருவாரூர் முருகன், கடந்த மாதம் 11-ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

போலீஸில் சரணடைந்த முருகனை, கர்நாடக போலீஸார் கஸ்டடி எடுத்து விசாரித்துவருகின்றனர். அதனால், தமிழக போலீஸார் விசாரிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், முருகனின் கூட்டாளிகளைப் போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

திருவாரூர் முருகன்
திருவாரூர் முருகன்

அந்தவகையில், திருச்சி சிறையில் உள்ள சுரேஷ், கணேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்திய போலீஸார், தற்போது திருவாரூரில் தங்கியிருந்த முருகனின் மனைவி மஞ்சுளாவை அழைத்துவந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். கொள்ளையடித்த நகைகளை முருகன் எங்கு வைத்துள்ளார், முருகன் மற்றும் கூட்டாளிகளின் சொத்து விவரங்கள் ஆகியவை குறித்து அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

புதைப்பது அவரின் ஸ்டைல்

விசாரணையில் மஞ்சுளா கூறிய விவரங்களையும் நம்மிடம் விவரித்தனர் போலீஸார். மஞ்சுளா அளித்துள்ள தகவலில், ``கொள்ளையடித்த நகைகளை யாரிடமும் கொடுத்து வைக்கமாட்டார். நகைகளைப் புதைத்து வைப்பதுதான் அவரின் ஸ்டைல். எங்கு நகைகளைப் புதைத்து வைத்திருப்பார், எப்போது எடுப்பார் என்பது எல்லாம் அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மனைவியாக இருந்தாலும் என்னிடம்கூட அதைப் பற்றிச் சொல்ல மாட்டார்.

தேவைப்படும்போது, புதைத்த நகைகளை வெளியே எடுத்து உடனே பணமாக மாற்றுவார். அப்படி மாற்றிய பணத்தை வீட்டில் உள்ள ட்ரம்மில் நிரப்பி வைத்திருப்பார். அந்த ட்ரம் மிக ராசியானது என்பது அவரின் நம்பிக்கை.

வீடு முழுக்க பணம்... தண்ணீர் டிரம்மிலும் கரன்சி கட்டு...

கடவுள் பக்தி அதிகம்

சிறுவயதிலிருந்தே எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். அவர் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் அதிகமான கோயில் குளங்களுக்குப் போக ஆரம்பித்தேன். நாங்கள் எந்த ஊருக்குப் போய் தங்கியிருந்தாலும் அங்குள்ள கோயில்களுக்குப் போவேன். என்னோடு அவரும் கோயில்களுக்கு வருவார். மற்றபடி எனக்கு வேறு எதுவும் தெரியாது” எனக் கூறியதாகத் தெரிவிக்கின்றனர் போலீஸார்.

திருச்சி லலிதா ஜூவல்லரியில் 28 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அதில் 25 கிலோ தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து, திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளை வழக்கில், முருகனின் கூட்டாளிகளான கணேசன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 1.25 கிலோ தங்கம் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் ஆகும். அந்த நகைகளில், பாதி நகைகளை முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் திருச்சி கொள்ளிடக்கரை, மதுரை வாடிப்பட்டி அடுத்துள்ள மேட்டுப்பட்டி மலையடிவாரம் ஆகிய இடங்களில் பூமிக்கடியில் புதைத்து வைத்திருந்தனர்.

` காருக்குள் முருகன், 12 கிலோ தங்க நகைகள்!' - கர்நாடக போலீஸை 18 கி.மீ விரட்டிய தமிழக போலீஸ்
முருகனுடன் மஞ்சுளா
முருகனுடன் மஞ்சுளா

மேலும், வேறு எந்தெந்த இடங்களில் நகைகள் புதைக்கப்பட்டுள்ளன என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. கர்நாடக போலீஸார் வசமுள்ள முருகனை தமிழகம் கொண்டுவந்தால் தெரியவரும் என்பதால், அதற்கான முயற்சிகளில் தமிழக போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

புதையலைத்தேடும் போலீஸார்

கொள்ளையடித்த நகைகளைப் புதைத்து வைத்துள்ள இடங்களைப் போலீஸார் தேடி வருகிறார்கள். முருகனின் மைத்துனர் சுரேஷை, திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை வழக்கை விசாரிக்கும் சமயபுரம் போலீஸ் ஆய்வாளர் மதன் தலைமையிலான தனிப்படை போலீஸார், மூன்றாவது முறையாக கஸ்டடி எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

கடந்த 29-ம் தேதியில் இருந்து சுரேஷிடம் விசாரித்துவரும் போலீஸார், அவரை தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், திருவாரூர் முருகன் கும்பல், திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை போன இரண்டே முக்கால் கிலோ நகைகளை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மண்ணில் புதைத்ததும் சில நகைகளை உருக்கிக் கட்டியாக மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மொத்தம் 3.25 கிலோ தங்க நகை மற்றும் 70 லட்ச ரூபாய் பணம் கொள்ளை போயின. அதில் தற்போது 2.75 கிலோ தங்க நகைகளை மீட்டுள்ளதாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.