Published:Updated:

திருவாரூர்: `குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்!’ - எச்சரிக்கும் காவல்துறை

திருவாரூர் காவல்துறை
News
திருவாரூர் காவல்துறை

`திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள்மீது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயக்குமார் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குற்றச்செயல்கள் அதிகரித்துவருவதால், அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள். குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்தவர்களில் பலர் ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தென்கோவனூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்கிற ராஜ்குமார், குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 39 வயதான ராஜ்குமார், தனது சின்னம்மாவைக் கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததாகக் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், இவர்மீது திருவாரூர் மாவட்ட காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

விஜயக்குமார்
விஜயக்குமார்

திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் அருகே கெழுவத்தூர் பகுதியில் வசித்துவந்தவர் நாகம்மாள். இவரின் கணவர் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில் நாகம்மாள் மட்டுமே தனது வீட்டில் தனியாக வசித்துவந்தார். இந்த நிலையில் நவம்பர் 10-ம் தேதி, நாகம்மாள் தனது வீட்டில் திடீரென மர்மமான முறையில் இறந்துகிடந்தது, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாகம்மாளின் சாவில் மர்மம் இருப்பதாக பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில், நாகம்மாளின் உறவினர்கள் புகார் கொடுத்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், நாகம்மாளின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நாகம்மாள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. அது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், நாகம்மாளை அவரின் அக்கா மகனே கொடூரமாகக் கொலை செய்ததாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.

ராஜ்குமார்
ராஜ்குமார்

நாகம்மாள் இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து, அதன் மூலம் அவர் பணம் சேர்த்து வைத்திருந்திருக்கிறார். தென்கோவணூரைச் சேர்ந்த நாகம்மாளின் அக்காள் மகன் ராஜ்குமார் அதை நோட்டம்விட்டு, நாகம்மாளிடம் அவர் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துவந்துள்ளார். சம்பவத்தன்று, நாகம்மாள் பணம் தர மறுத்ததால், இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில்தான் ராஜ்குமார் தனது நண்பருடன் சேர்ந்து நாகம்மாளைக் கழுத்தை நெரித்துக் கொலைசெய்தததாக காவல்துறையினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக ராஜ்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயக்குமாரின் பரிந்துரையின்பேரில், ராஜ்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, ராஜ்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சரவணன்
சரவணன்

மன்னார்குடி பகுதியில் சட்டவிரோதமாக போலி மது பாட்டில் தயார் செய்து விற்பனை செய்ததாக, சில நாள்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்ட மேலநத்தம் சரவணன் என்பவர் மீதும் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள்மீதும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயக்குமார் எச்சரிக்கை செய்துள்ளார்.

இது குறித்துப் பேசும் திருவாரூர் காவல்துறையினர், ‘``குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடியவர்களை மற்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தால், அடுத்த சில வாரங்களில் ஜாமீனில் வெளியில் வந்து மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதுபோல் குண்டர் சட்டத்தில் எளிதில் வெளியில் வர முடியாது. சாதாரண குற்றங்களில் ஈடுபட்டால்கூட, குண்டர் சட்டத்தில் நீண்ட நாள்கள் சிறையில் இருக்க வேண்டும் என்ற பயம் வந்தால்தான், மற்றவர்களும் குற்றச்செயல்களில் ஈடுபடத் தயங்குவார்கள். திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போதைய சூழலில் இது போன்ற அதிரடி நடவடிக்கை மிகவும் அவசியமாக உள்ளது’’ என்கிறார்கள்.