Published:Updated:

திருவாரூர்: நகைப் பட்டறைகளை மட்டுமே குறிவைக்கும் திருடன்! - நாமக்கலில் மடக்கிய போலீஸார்

கைது
கைது

திருவாரூர் போலீஸார் நாமக்கல்லுக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். அங்குள்ள சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் (45) என்பவரைப் பற்றி தகவல் கிடைத்திருக்கிறது. அவரைப் பிடித்து விசாரித்திருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருடர்களில் பலவிதம். வீடுகளில் மட்டுமே கைவரிசையைக் காட்டும் திருடர்கள், வங்கிகளில் கைவைக்கும் திருடர்கள், பெரிய நகைக் கடைகளில் கொள்ளையடிப்பவர்கள் எனத் தனித் தனிக் கொள்கையோடு ரூட் போட்டுச் செயல்படுவார்கள். காவல்துறையினர் இதைத் துல்லியமாக உற்று நோக்கி, வகைப்படுத்தித் தங்களது தேடுதல் வேட்டையில் ஈடுபடுவார்கள். திருடர்களை எளிதில் பிடிக்க, இந்தக் கொள்கை வகைப்பாடு காவல்துறையினருக்கு உறுதுணையாக இருக்கிறது. அந்த வகையில் நகைப் பட்டறைகளில் மட்டும் கைவரிசை காட்டிவந்த திருடனை திருவாரூர் காவல்துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள்.

திருவாரூர்
திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வாரச்சந்தைப் பகுதியில் நகைப் பட்டறையுடன்கூடிய நகைக் கடையைவைத்து நடத்திவருபவர் தனாஜி. கடந்த 7-ம் தேதி இரவு இவரது பட்டறையில் பூட்டு உடைக்கப்பட்டு, ஐந்து சவரன் தங்க நகைகள், நாலரை கிலோ வெள்ளிப் பொருள்கள், 52,000 ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, முத்துப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்திவந்தனர்.

தனாஜியின் நகைப் கடையில் எந்தப் பொருளும் திருட்டுப்போகாத நிலையில், பட்டறையில் மட்டுமே கொள்ளைச் சம்பவம் நடைபெற்றதால், இந்தக் கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்தநிலையில், நகைப் பட்டறைகளை மட்டும் குறிவைத்துத் திருடும் திருடன் நாமக்கல்லில் இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், முத்துப்பேட்டை காவல்துறையினர், நேற்று முன்தினம் நாமக்கல்லுக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். அங்குள்ள சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் (45) என்பவரைப் பற்றி தகவல் கிடைத்திருக்கிறது. அவரைப் பிடித்து விசாரித்திருக்கிறார்கள்.

கைது
கைது

இது குறித்து பேசும் முத்துப்பேட்டை காவல்துறையினர், ``வேலாயுதத்திடம் நாங்கள் மேற்கொண்ட விசாரணையில், இவர், நகை செய்யும் பட்டறைகளுக்கு முன்பு கொட்டிக்கிடக்கும் மணலைச் சேகரித்து எடுத்துச் செல்லும் தொழிலில் ஈடுபட்டுவருவதும், அதோடு தனது தொழில் கூட்டாளியான முருகனுடன் சேர்ந்து, முத்துப்பேட்டையிலுள்ள நகைப் பட்டறையில் கொள்ளையடித்ததும் உறுதியானது. அதைத் தொடர்ந்து, வேலாயுதத்தைக் கைதுசெய்து, அவர் கொள்ளையடித்த நகை, வெள்ளிப் பொருள்கள், திருடப்பட்ட பணம் ஆகியவற்றைக் கைப்பற்றினோம்’’ எனத் தெரிவித்தார்கள். கைதுசெய்யப்பட்ட வேலாயுதத்தை, திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய வேலாயுதத்தின் கூட்டாளியான முருகனை முத்துப்பேடை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.

`8 வருட தொடர் திருட்டு; பூட்டியிருக்கும் கிராமத்து வீடுதான் டார்கெட்’ -பலே திருடன் சிக்கியது எப்படி?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு