Published:Updated:

கஞ்சா கடத்தலில் இளைஞர்கள்; 3 பேர் கைது; காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் திருவாரூர்!

கைது
கைது

அவர்களது நடவடிக்கையிலும் பேச்சிலும் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியிருக்கிறார்கள். விசாரணையின்போது அந்த மூன்று நபர்களும் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்திவருகிறார்கள். எஸ்.பி சீனிவாசன் உத்தரவின்பேரில் இந்த மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, திருவாரூர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் சில இளைஞர்கள், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவருவதாக திருவாரூர் நகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸ் டீம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பேர்
கைது செய்யப்பட்ட மூன்று பேர்

இந்தநிலையில், அலிவலம் சாலையில் மூன்று பேர் டூ வீலரில் வந்திருக்கிறார்கள். அவர்களது நடவடிக்கையிலும் பேச்சிலும் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியிருக்கிறார்கள். விசாரணையின்போது அந்த மூன்று நபர்களும் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களைச் சோதனையிட்டபோது, அவர்களிடம் முக்கால் கிலோ கஞ்சா இருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். கஞ்சா கடத்தி சென்று விற்பனை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்திருக்கிறது. இது குறித்துப் பேசிய திருவாரூர் காவல்துறையினர், ``நாங்கள் நடத்திய விசாரணையில் இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட 25 வயது இளைஞரான ராஜா என்ற காசிலிங்கம், திருவாரூர் அழகிரி காலனியைச் சேர்ந்தவர். 22 வயதான சிவசங்கர் சுந்தரவளாகம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது. மற்றொருவர், 34 வயது நிரம்பிய ஸ்டாலின். இவர்களிடமிருந்து, முக்கால் கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்திருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்கள்.

கைது
கைது

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மன்னார்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ``திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான கண்காணிப்பும் மேலும் தீவிரப்படுத்தப்படும்’’ என திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு