Published:Updated:

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஏஜென்ட்டுகள் பதுங்குவதற்குத் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

ஐ.எஸ்.ஐ.எஸ்
ஐ.எஸ்.ஐ.எஸ்

சட்டம் ஒழுங்கில் அமைதிப்பூங்காவாக திகழும் தமிழ்நாடு, சமீப ஆண்டுகளாக ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நிதி கேந்திரமாகவும், அந்த இயக்கத்துக்கு ஆள் பிடிக்கும் ஏஜென்ட்டுகள் பதுங்கும் இடமாகவும் மாறியுள்ளது.

"நம்மளை, சுத்தி வளைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இனிமேலும் தமிழ்நாட்டுல இருந்து செயல்படுறது ஆபத்து. சூடு குறையுறவரைக்கும் பிரிஞ்சு இருங்க. அப்புறம் ஒண்ணா சேர்ந்துக்கலாம்!" - இந்த எச்சரிக்கையை வெறுமனே கடந்து செல்ல முடியாது. இந்து முன்னணி பிரமுகர் அம்பத்தூர் சுரேஷ் கொலையில் தொடர்புடைய காஜா மொய்தீன், சமீபத்தில் டெல்லியில் கைதுசெய்யப்பட்டார். இவருக்கு எங்கோ ஒரு தேசத்திலிருந்து வந்த ரகசியத் தகவல்தான் இந்த எச்சரிக்கை. இந்தத் தகவலை மோப்பம்பிடித்த தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ), தமிழகத்தில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை வேட்டையாடத் தொடங்கியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம் ஒழுங்கில் அமைதிப்பூங்காவாக திகழும் தமிழ்நாடு, சமீப ஆண்டுகளாக ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நிதி கேந்திரமாகவும், அந்த இயக்கத்துக்கு ஆள் பிடிக்கும் ஏஜென்ட்டுகள் பதுங்கும் இடமாகவும் மாறியுள்ளது. 2014-ல் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்றபோது, இந்தியாவிலேயே முதல் ஆளாக கடலூரைச் சேர்ந்த ஹாஜா பக்ருதீன் என்பவர் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தன் குடும்பத்தையும் சிரியாவுக்கு அழைத்துச் சென்ற ஹாஜா பக்ருதீன், அங்கு இருந்தபடியே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் பிடிக்கும் பணியையும் தமிழ்நாட்டில் செய்துவந்தார். மொய்தீன், ஷகீல் ஹமீத், முத்தலீப் என மூன்று பேருக்கும் தவறான போதனைகளை அளித்து, அவர்களை பயங்கரவாதிகளாக ஹாஜா பக்ருதீன் மாற்றியபோதுதான் என்.ஐ.ஏ விழித்துக் கொண்டது. சம்பந்தப்பட்ட மூவரையும் கைதுசெய்து விசாரித்தபோது, தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்கள் இயக்கத்துக்கு ஆள் திரட்ட தமிழ்நாட்டைப் பயன்படுத்திவந்துள்ளது தெரியவந்தது.

நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு என்.ஐ.ஏ-வின் தென் பிராந்திய மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "2013-ம் ஆண்டில் சிரியாவின் ராஃகா நகரத்தைப் பிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர், அடுத்த இரண்டே ஆண்டுகளில் சிரியாவின் கிழக்குப் பகுதி, ஈராக்கின் மேற்குப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள். உலகின் பணக்காரத் பயங்கரவாத இயக்கம் என்ற பெயரையும் பெற்றது அந்த இயக்கம். 'இஸ்லாமியர்கள் வாழும் நாடுகள் முழுவதையும் கலீபாவின் ஆட்சிக்குள் கொண்டுவருவதே எங்கள் லட்சியம்' என்று அவர்கள் வெளிப்படையாக அறிவித்தனர். இதனால் ஈர்க்கப்பட்டு சிரியாவுக்குப் போர் செய்ய புறப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரில் இந்தியர்களும் அடக்கம். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக உள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஏஜென்ட்டுகள் பதுங்குவதற்குத் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்கள் பட்டியல் நீளமானது. இங்கே இருந்து துருக்கி செல்பவர்கள், சாலை மார்க்கமாக சிரியாவுக்குள் நுழைகிறார்கள். பிறகு, சிரியாவில் இருந்துகொண்டே ஆள் திரட்டுவதையும் தங்கள் இயக்கத்துக்குத் தேவையான நிதி திரட்டுவதையும் தமிழகத்தில் செய்துள்ளனர். புலனாய்வுத் துறையினரின் கெடுபிடி அதிகமானதால்தான், ஐ.எஸ்.ஐ.எஸ் பாணியில் எங்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக அப்பாவியான சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனைக் கொன்றுள்ளனர்" என்றவரிடம், "தமிழகத்தை ஏன் டார்கெட் செய்கிறார்கள், மற்ற மாநிலங்களில் இந்தப் பிரச்னை இல்லையா?" என்றோம்.

"எல்லா மாநிலங்களிலும் இந்தப் பிரச்னை உள்ளது. ஆனால், தமிழகத்திலும் கேரளாவிலும் வாழும் முஸ்லிம்கள் சற்று வசதி படைத்தவர்கள். இவர்களில் சிலரை மூளைச்சலவை செய்து நிதி வசூலிப்பதை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் செய்து வருகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் அமெரிக்கா, ரஷ்யாவால் பாதிக்கப்படுவது குறித்து பிரசாரம் செய்து நிதி திரட்டுகின்றனர். அதேசமயம் மார்க்கத்தின்மீது உண்மையான நம்பிக்கைகொண்ட முஸ்லிம்கள் இவர்களுக்கு உதவுவதில்லை" என்றார்.

- அவர் கூறிய விரிவானத் தகவல்களுடன் ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > காஷ்மீர் டு கன்னியாகுமரி... ஆபரேஷன் 'பிளாக்‌ஷீப்' - தலைமறைவான குடும்பங்கள்! - வலை வீசும் என்.ஐ.ஏ https://www.vikatan.com/social-affairs/crime/national-investigation-agency-action-is-operation-black-sheep

முறியடிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் திட்டம்!

களியக்காவிளை சோதனைச்சாவடியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் ஜனவரி 8-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வில்சன் கொலையை நிகழ்த்திய பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தௌஃபிக் ஆகியோர் தங்கள் வாக்குமூலத்தில் இலங்கை சர்ச்சில் நடத்தப்பட்டதுபோல் தமிழகத்திலும் தொடர் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டதாக பகீர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்!

கொலையாளிகள் களியக்காவிளை செக்போஸ்ட் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதி வழியாகத் தப்பிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகளை போலீஸார் வெளியிட்டனர். அதில் இருந்த அப்துல் சமீம், தௌஃபிக் ஆகியோர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள்; இந்து முன்னணி அமைப்பின் சுரேஷ்குமார் கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், ஜனவரி 14-ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பியில் அப்துல் சமீம், தௌஃபிக் ஆகியோரை கைதுசெய்தது போலீஸ்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம், கோட்டார் இளங்கடையைச் சேர்ந்த தௌஃபிக் ஆகியோர் கடலூரைச் சேர்ந்த காஜா முகைதீன் என்பவரின் வழிகாட்டுதலின்படி இந்தக் கொலையைச் செய்துள்ளனர். இந்து முன்னணி அமைப்பின் பிரமுகர் சுரேஷ்குமார் கொலையில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட காஜா முகைதீன், அப்துல் சமீம் ஆகியோர் புழல் சிறையில் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது 'அல் இந்த்' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நாடு முழுவதும் இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்துவதுதான் அந்த அமைப்பின் நோக்கமாம். 'அல்' என்ற வார்த்தைக்கு அடுத்து இருக்கும் 'இந்த்' என்பது இந்தியாவின் சுருக்கம்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஏஜென்ட்டுகள் பதுங்குவதற்குத் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

இவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு தலைமறைவாகி நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்று ஐ.எஸ் அமைப்பினரிடம் பயிற்சி பெற்றுள்ளனர். 17 பேர்கொண்ட அந்த அமைப்பில், மூன்று பேர் தற்கொலைப்படைத் தாக்குதல் பயிற்சியும் பெற்றுள்ளனர். ஐ.எஸ் அமைப்பின் வழிகாட்டுதல்படி 'அல் இந்த்' என்ற தங்கள் அமைப்பை 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இந்தியா' என்பதைக் குறிக்கும் வகையில் 'ஐ.எஸ்.ஐ' அமைப்பைத் தொடங்க முடிவுசெய்தனர். புதிய அமைப்புக்குத் தலைவராக காஜா முகைதீனை நியமித்தார்கள். இதற்காக மகாராஷ்டிரம் மாநிலத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அலுவலகமாக மாற்றினார்கள். இலங்கை சர்ச்சில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்று தமிழகத்திலும் தொடர் தாக்குதல்களை நடத்திவிட்டு, அதற்கு தங்கள் ஐ.எஸ்.ஐ அமைப்பு பொறுப்பேற்க வேண்டும். அதன்மூலம் தங்கள் புதிய அமைப்பை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது காஜா முகைதீனின் திட்டம்” என்றவர், அவர்களின் அடுத்தடுத்த பகீர் திட்டங்களையும் பகிர்ந்துகொண்டார்.

- அப்துல் சமீம், தௌஃபிக் ஆகியோர் பற்றியும், இவர்கள் அளித்த வாக்குமூலம் பற்றியும் போலீஸ் அதிகாரி ஒருவர் விரிவாகப் பகிர்ந்துகொண்ட தகவல்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > இலங்கைபோல் இந்தியாவிலும் தாக்குதல்! - மகாராஷ்டிரத்தில் அலுவலகம், 20 சிம் கார்டுகள், புதிய இயக்கம்... - முறியடிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் திட்டம் https://www.vikatan.com/news/general-news/tn-police-defeated-terrorists-conspiracy

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு