Published:Updated:

``பைக் இருந்தால்தானே ஃபைன் போடுவீங்க;இப்ப என்ன பண்ணுவீங்க!''-நடுரோட்டில் மக்களைப் பதறவைத்த போதை நபர்

தூத்துக்குடியில் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்ததால் அபராதம் விதிக்கப்பட்டது குறித்து, போதையில் மனைவியுடன் நடந்த தகராறால் கணவர், பைக்கை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுரோட்டில் எரியும் பைக்
நடுரோட்டில் எரியும் பைக்

தூத்துக்குடி தாமோதரநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுமயில். இவர் பிளம்பிங் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வந்ததற்காக போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல வேலுமயிலுவின் மனைவி, வீட்டுச் செலவுக்குப் பணம் கேட்டுள்ளார். `ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டிட்டு வந்தேன். அதனால ஃபைன் போட்டுட்டாங்க. இப்போ எங்கிட்ட பணம் இல்ல' எனச் சொன்னாராம். அப்போது வேலுமயில் மது அருந்தியிருந்தாராம். `வேலைக்கு ஒழுங்கா போகாம குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு வந்தா அப்படித்தான் ஆகும்.

பைக்கை தீ வைத்த வேலுமயில்
பைக்கை தீ வைத்த வேலுமயில்

சரியா வேலைக்குப் போகாத உங்களுக்கு எதுக்கு பைக்கு?' எனச் சொல்லி மனைவி கேட்டாராம். இதையடுத்து, கணவன், மனைவி இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியது. இந்நிலையில், கோபத்தில் வீட்டிலிருந்து கிளம்பி, தாமோதரநகர் சந்திப்பு பகுதிக்கு வந்த வேலுமயில், பைக்கை நிறுத்தி, `இனிமேல் பைக் இருந்தால்தானே அபராதம் போடுவாங்க. பைக் இல்லாவிட்டால் என்ன செய்வார்கள். இப்ப என்ன பண்ணுவீங்க?' எனப் புலம்பியபடியே தான் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி, பெட்ரோலில் நனைத்து பைக் மீது போட்டு தீ வைத்துள்ளார்.

`பைக்கை ஏன் கொளுத்துனீங்க?' என அப்பகுதியினர் கேட்க `ஹெட்மெட் போடலன்னு ஃபைன் போட்டாங்க. அதனால கொளுத்துனேன்' எனச் சொல்லி பற்றி எரிந்த பைக்கைச் சுற்றிச் சுற்றி வந்தவர், சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார். அப்பகுதி வழியே சென்றவர்கள் பைக் பற்றி எரிந்த காட்சியை தங்கள் மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். `பைக் எப்படி எரிஞ்சுது' என ஒவ்வொருவராகக் கேட்க, `ஹெல்மெட்டுக்குப் பிடிச்சாங்களாம். அதனால பைக் ஓனரே கொளுத்திட்டாராம்' என்ற பதிலே சொல்லப்பட்டு வந்தது. இரண்டு நாள்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வந்ததற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் வீட்டில் வேலுமயிலுடன் மனைவி தகராறு செய்துள்ளார். இந்தக் கோபத்தில் பைக்கை வேலுமயில் கொளுத்தியுள்ளார். இந்த விவகாரம் தெரியாமல், `ஹெல்மெட்டு போடாததினால் ஃபைன் போட்டதால் தூத்துக்குடியில் பைக்கை ஒருத்தர் தீ வைத்து கொளுத்திட்டாரு' என்றே தகவல் பரப்பப்பட்டு வந்தது.

நடுரோட்டில் எரியும் பைக்
நடுரோட்டில் எரியும் பைக்

இந்த வீடியோவும் சமூக வலைதளங்களிலும் வைரலானது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தென்பாகம் போலீஸார், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து எரிந்த இருசக்கர வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல்நிலையம் கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் பைக்கை எரித்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.