Published:Updated:

தூத்துக்குடி:`நானா தீவெச்சேன்?’ - மதுபோதையில் காம்பவுண்டைக் கொளுத்தியவர் கைது

தீவைக்கப்பட்ட காம்பவுண்ட்
தீவைக்கப்பட்ட காம்பவுண்ட்

தூத்துக்குடியில் மதுபோதையில் காம்பவுண்டுக்குள் சண்டைபோட்டு ரகளையில் ஈடுபட்டவரை வீட்டைவிட்டு காலி செய்யவைத்த ஆத்திரத்தில், ஒன்பது சைக்கிள்கள், பைக்குகளுக்கு தீவைக்கப்பட்டதில், ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி, தெற்குகாட்டன் ரோட்டில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான காம்பவுண்ட் இருக்கிறது. அங்கு 20 வீடுகள் இருக்கின்றன. இவற்றில், ஒரு வீட்டில் நடராஜனின் மகன் அண்ணாமலை, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவருகிறார். இவர், அந்தப் பகுதியில் டூ வீலர் ஒர்க்‌ஷாப் நடத்திவந்தார். அதே காம்பவுண்டில் குடியிருந்த மரியஅந்தோணி தினேஷ் மென்டிஸ் என்பவர் அடிக்கடி மது அருந்திவிட்டு, அங்கு குடியிருப்பவர்களிடம் தகராறு செய்திருக்கிறார்.

தீயில் கருகிய சைக்கிள், பைக்குகள்
தீயில் கருகிய சைக்கிள், பைக்குகள்

இது குறித்து காம்பவுண்டில் பிற வீடுகளில் வசிப்போர் புகார் கூறிய நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர், அவரை வீட்டை காலி செய்யவைத்திருக்கிறார்கள். வீட்டை காலி செய்ய வைத்ததால், ஆத்திரத்தில் மரிய அந்தோணி அடிக்கடி காம்பவுண்டுக்கு வெளியில் நின்றுகொண்டு, மதுபோதையில் வாய்க்குவந்தபடி திட்டுவதும், அருகில் உள்ளவர்கள் சமாதானம் செய்து அனுப்பிவைப்பதுமாக இருந்து வந்திருக்கிறது.

இந்தநிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளயவில் குடிபோதையில் அங்கு வந்து தகராறு செய்திருக்கிறார் மரிய அந்தோணி. பின்னர், அதிகாலையில் காம்பவுண்டுக்குள் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்களுக்குத் தீவைத்திருக்கிறார். இதில் ஒன்பது சைக்கிள்கள், பைக்குகள் ஆகியவை மளமளவென தீப்பற்றி எரிந்தன. மேலும், அண்ணாமலையின் வீட்டுக்குள்ளும் தீ பரவியது. தூங்கிக்கொண்டிருந்த அண்ணாமலை, தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த அண்ணாமலை, சிகிச்சை பெற்றுவரும் மகன் நித்தின்
உயிரிழந்த அண்ணாமலை, சிகிச்சை பெற்றுவரும் மகன் நித்தின்

இந்தத் தீவிபத்தில் அவருடைய 8 வயது மகன் நித்தின், காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். மாடியில் உறங்கியதால், அண்ணாமலையின் மனைவி கங்காதேவியும் அவரருடைய மற்றொரு 6 வயது மகன் நிகிலும் உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரி சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் தீ; தரைமட்டமான கட்டடம்! - தொழிலாளியைப் பலிகொண்ட விபத்து

இந்தநிலையில், கிளியோபாட்ரா தியேட்டர் அருகில் மரியஅந்தோணி தற்போது குடியிருந்துவரும் வீட்டுக்கு தென்பாகம் போலீஸார் அவரைக் கைதுசெய்யச் சென்றபோது, ஹாயாக சிகிரெட் பிடித்தபடி வீட்டு வாசலில் அமர்ந்திருந்தாராம். `எதுக்குடா பைக்குக்கு தீயைவெச்ச... உன்னால ஒரு உயிர் அநியாயமாப் போயிடுச்சே...” என்று போலீஸார் கேட்டதற்கு, ``நானா தீவெச்சேன்? சும்மா சண்டைதான் போட்டேன். தீயெல்லாம் வைக்கலை’’ எனச் சொல்லி போலீஸாரையே அதிரவைத்திருக்கிறார்.

ஆய்வு செய்த எஸ்.பி., ஜெயக்குமார்
ஆய்வு செய்த எஸ்.பி., ஜெயக்குமார்

ஆனால், அந்தப் பகுதி சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மரிய அந்தோணி, அந்த காம்பவுண்டுக்குள் போதையில் தள்ளாடிச் செல்வது முதல் சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்து புகைவெளியாவது வரை பதிவாகி இருந்தன. அந்தக் காட்சிகளைக் காட்டிய பிறகே, போதையில் செய்த தவறை ஒப்புக்கொண்டிருக்கிறார் மரிய அந்தோணி. அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு