Published:Updated:

தூங்கிய நேரத்தில் வீடுபுகுந்து வெட்டிக்கொன்றனர்! - ரவுடி கொலையில் கும்பல் விட்டுச்சென்ற `க்ளு'

இ.கார்த்திகேயன்
ப.கதிரவன்

தூத்துக்குடியில் பழிக்குப் பழியாக வீடுபுகுந்து நடந்த கொலையில், கும்பலில் ஒருவன் விட்டுச் சென்ற ஏடிஎம் கார்டு மூலம் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர் போலீஸார்.

கொலை செய்யப்பட்ட சிந்தா சரவணன்
கொலை செய்யப்பட்ட சிந்தா சரவணன்

தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்தவர் சிந்தா சரவணன். இவர், தன் இரண்டாவது மனைவி கார்த்திகா மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தூத்துக்குடியில் பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, திருட்டு, வழிப்பறி என 11 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கொலை செய்யப்பட்ட சிந்தா சரவணன்
கொலை செய்யப்பட்ட சிந்தா சரவணன்

ஒருசில வழக்குகளில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த சிந்தா சரவணன், தனது உயிருக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்று தெரிந்து கொண்டு, மாதாநகரில் இருந்து கே.வி.கே நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டில் சிந்தா சரவணன் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சிந்தா சரவணனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியது. இதில், கழுத்தில் அறுபட்ட நிலையில் சிந்தா சரவணன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.

சம்பவ இடத்தைத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் நேரில் பார்வையிட்டு விசாரணை செய்தார். தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது வீட்டுக்குள் கொலையாளிகளுள் ஒருவன் விட்டுச் சென்ற தனியார் வங்கியின் ஏடிஎம் கார்டு ஒன்று கிடந்தது. போலீஸாரின் விசாரணையில், அந்த ஏடிஎம்‌ கார்டு மகாராஜன் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி
சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

அதை வைத்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 2016-ம் ஆண்டு ஜூன் மாதம், தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி பட்டுராஜ் என்பவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகிலுள்ள கன்னிராஜபுரத்தில் வெடிகுண்டு வீசிக் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை வழக்கில், ரவுடி சிந்தா சரவணன், 2-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால், பட்டுராஜ் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் பழிக்குப்பழியாக இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. கடந்த 19-ம் தேதி தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடர்புடைய சிவகுமார் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, நீதிமன்றம், காவல்நிலையம் அருகில் பழிக்குப்பழியாக நடுரோட்டில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மனைவி மற்றும் உறவினர்கள்
மனைவி மற்றும் உறவினர்கள்

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது ரவுடி சிந்தா சரவணனும் பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக நான்கு கொலைகள் நடந்துள்ளன.