Published:Updated:

`#Corona-வால் டிமாண்ட் அதிகம்!’ - தூத்துக்குடியில் போலி சானிடைஸர் தயாரித்த கும்பல்

போலி தயாரிப்புகள்
போலி தயாரிப்புகள்

கொரானா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் பயன்படுத்தப்படும் கிருமிநாசினி வகைகளை தூத்துக்குடியில் போலியாக தயாரித்து விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இத்தாக்குதலால் 11,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 250-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பலரும் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

போலி தயாரிப்புகள்
போலி தயாரிப்புகள்

வெளியில் செல்லும்போது மக்கள் மாஸ்க் அணிந்து செல்லவும், கைகளை கிருமிநாசினிகளைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்திடுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. உடனே, மாஸ்க்குகள், கிருமிநாசினிகள் மட்டுமல்லாமல், ஆண்டிபயாட்டிக் மருந்துகள், டெம்ப்ரேச்சர் கருவிகள், கைகழுவும் லிக்குவிட்கள் போன்றவை பதுக்கி வைக்கப்பட்டு கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இப்புகார் குறித்து பல மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பல கடைகள் சீல் வைக்கப்பட்டன. இந்த நிலையில், இவற்றின் தற்போதைய தேவையைப் பயன்படுத்தி, தூத்துக்குடியில் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி வகைகளை போலியாகத் தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

போலி தயாரிப்புகள்
போலி தயாரிப்புகள்

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 5-வது தெருவில் ஒரு வீட்டில் மாவட்ட நியமன அலுவலர் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி மாரியப்பன் தலைமையில் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் சிப்காட் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அங்கு போலியாக கைகழுவும் கிருமிநாசினி தயாரித்துக் கொண்டிருந்த ஞானகிஷோர் ராஜ் மற்றும் ஜான் பெனடிக்ட் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். கைகழுவும் கிருமிநாசினி மட்டுமல்லாமல், டாய்லெட் கிளீனர், தரையை சுத்தம்செய்யும் கிளீனர், டிஸ்வாஷ் ஆகியவையும் போலியாக தயாரிக்கப்பட்டு பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு முன்னணிக் கம்பெனிகளின் பெயரில் போலியாக ஸ்டிக்கர் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த போலி hand sanitiser, டாய்லெட் கிளீனர், floor கிளீனர், டிஸ்வாஷ் மற்றும் கலப்படம் செய்ய வைத்திருந்த 500 லிட்டர் ஆயில் ஆகியவற்றை கைப்பற்றினர்.

போலி சோப் ஆயில்
போலி சோப் ஆயில்

இதுதொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசிடம் முறையான அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக இவற்றைத் தயார் செய்து கடைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என போலீஸார் கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு